தொடர் மழையால் கிளிநொச்சியில் வெள்ளம் : பொதுமக்கள் பாதிப்பு (Photos)
கிளிநொச்சி பூநகரி பிரதேசத்திற்குட்பட்ட சில கிராமங்கள் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி கிராஞ்சி பொன்னாவெளி வலைப்பாடு சிவபுரம் பாலாவி உள்ளிட்ட கிராமங்களுக்கான 12கிலோ மீற்றர் பிரதான வீதியில் ஏழு கிலோ மீட்டர் தூரம் வெள்ள நீரில் மூழ்கிக் காணப்படுவதனால் குறித்த கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருப்பதுடன் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடுகளும் நிலவி வருகின்றது.
குறித்த பகுதிகளுக்கான போக்குவரத்து பாதையாக காணப்படுகின்ற பல்லவராயன் கட்டு வலைப்பாடு வீதயின் பல்லவராயன் கட்டு சந்திமுதல் பிருந்தாவனம் வரையான ஏழு கிலோமீற்றர் தூரம் கடந்த ஆறு நாட்களாக வெள்ளத்தில் மூழ்கி இருப்பதினால் அங்கே இருக்கின்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களுடைய தேவைகளுக்காக வெளியில் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.
பாடசாலைகளுக்கு செல்ல முடியாத நிலை
பாடசாலைகளின் கற்றல்நடவடிக்கைகளுக்காக வெளியிடங்களில் இருந்துசெல்லும் ஆசிரியர்கள் செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் இல்லை உழவு இயந்திரத்தில் மாத்திரமே மக்கள் போக்குவரத்து செய்கின்றனர்.
அவை தவிர குறித்த பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்களில் அத்தியாவசிய பொருட்கள் இல்லாது இருப்பதாகவும் அவற்றைப் பெற்றுக் கொள்வதில் சிரமங்கள் காணப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுமட்டுமன்றி உயர்தரமாணவர்கள் முழங்காவில் மற்றும் ஏனைய பாடசாலைகளுக்கு செல்ல முடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழுகின்ற இக்கிராமங்களில் உள்ள வர்த்தக நிலையங்களில் அத்தியாவசிய பொருட்கள் முற்று முழுதாக முடிவடைந்த நிலை காணப்படுகின்றன.
வைத்தியசாலை செல்வதில் இடர்பாடுகள்
இவை தவிர பூநகரி முழங்காவில் ஆகிய பகுதிகளில் இருந்து செல்ல வேண்டிய மரக்கறி வகைகள் மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களும் தீர்ந்துள்ளதால் இந்த கிராமங்களில் வாழுகின்ற மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.
வேரவில் வைத்தியசாலையில் இருந்து நோயாளிகளை முழங்காவில் ஆதார வைத்தியசாலை மற்றும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை ஆகியவற்றிற்கு கொண்டு செல்வதிலும் இடர்பாடுகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இரத்த சுத்திகரிப்புக்காக சாவகச்சேரி வைத்தியசாலை செல்வதற்கும் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் உயிர் ஆபத்துக்களை கூட எதிர் நோக்க வேண்டி வரும் என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது குறித்த பிரதேசங்களுக்கான போக்குவரத்து சேவைகளை பூநகரி பிரதேச சபையின் உழவுஇயந்திரங்கள் இலவசமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |