மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கி வைப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் படிப்படியாக குறைந்துவரும் நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் பணிகளை அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது.
அந்த வகையில், மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சத்துருக்கொண்டான் மக்களுக்கு ஒரு தொகுதி உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் குறித்த உலருணவுப் பொதிகள் சத்துருக்கொண்டான் புளியடிமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் பாதுகாப்பாக மக்களை தங்கவைத்துள்ள இடைத்தங்கல் முகாமில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
செய்தி - குமார்
படுவாங்கரை பிரதேசம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பிரதேசத்தில் உட்பட்ட மண்மனை மேற்கு பிரதேசம் வெள்ளப்பெருக்கினால் மிகவும் வெகுவாக பாதிக்கப்பட்ட நிலையில், வெள்ள நிலைமை தொடர்பில் நாடாளமன்ற உறுப்பினர் ஞாமுத்து சிறிநேசன் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று அவதானித்துள்ளனர்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
வெள்ளப்பெருக்கினால் மண்முனை தென் மேற்கு பிரதேசத்தில் 2425 குடும்பங்களைச் சேர்ந்த 7404 சேர்ந்த மக்கள் இப்பிரதேசத்தில் இடம்பெயர்ந்து நண்பர்கள் உறவினர்களின் வீடுகளிலும், ஏனைய பொது இடங்களிலும் தங்கி இருக்கின்றார்கள்.
இன்றைய தினம் சனிக்கிழமை மெதுமெதுவாக வெள்ளம் வடிந்து வருகின்ற நிலையில் அவர்களின் சொந்த இருப்பிடங்களுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
மேலும், மக்கள் அவர்களுடைய வீடுகளுக்குச் சென்று அவருடைய வீடுகளை துப்புரவு செய்யும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றார்கள் என்பதை நாம் அறிய முடிகின்றது’’ என்றார்.
செய்தி - ருசாத்
இயற்கை அனர்த்தினால் பாதிக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்கள் கடன்பெற்று தமது குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தங்களது நிலைமைகளை கருத்தில் கொண்டு தமக்குரிய நிவாரண உதவிகளை வழங்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இயற்கை அனர்த்தம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள கரையோர பிரதேச கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களது உடமைகளும் சேதமடைந்துள்ளன.
இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் எதுவித வருமானமும் இன்றி தாம் கஷ்டப்படுவதாகவும் தங்களுக்குரிய நிவாரணங்களை வழங்க உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
தென்மராட்சி
வெள்ள அனர்த்தம் காரணமாக யாழ். தென்மராட்சி பிரதேசத்தில், இடம்பெயர்ந்த மக்கள் 20 இடைத்தங்கள் முகங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
415 குடும்பங்களைச் சேர்ந்த 1477 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வீடுகளுக்குள் வெள்ளம் நிறைந்துள்ளதால் அவற்றை வெளியேற்றும் நடவடிக்கையில் சாவகச்சேரி பிரதேச செயலகம், சாவகச்சேரி பிரதேச சபை ஆகியவற்றுடன் இணைந்து இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.
மட்டக்களப்பு - வவுணதீவு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கன்னன்குடா மற்றும் வலையிரவு பாலத்தின் போக்குவரத்து நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இன்று விஜயம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்.
மட்டக்களப்பு விமான படையின் படகுமூலம் இன்று இந்த விஜயத்தினை முன்னெடுத்து மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக நேரில் சென்று ஆராய்ந்தார்.
இதன் போது கன்னன்குடா பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களது பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடி அவர்கள் தேவைகள் தொடர்பாக கேட்டறிந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |