இத்தாலி-கெடானியா விமான நிலையத்திற்கு விமானங்கள் வருவது இடைநிறுத்தம்!
உலகின் மிகவும் சுறுசுறுப்பான எரிமலைகளில் ஒன்றான இத்தாலியின் எட்னா மீண்டும் சீற்றமடைந்து வருவதால், சிசிலி தீவிலுள்ள கெடானியா சர்வதேச விமான நிலையத்திற்கு விமானங்கள் வருவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் பிரதான மையமாக விளங்கும் சிசிலியின் கெடானியா பகுதி வான்வெளியில் எரிமலைச் சாம்பல் படர்ந்துள்ளதால் பாதுகாப்பு கருதி வான்வெளி மூடப்பட்டுள்ளதாக விமான நிலைய நிர்வாகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக கெடானியா விமான நிலையத்திற்கு வரும் அனைத்து விமானங்களின் வருகையும் உள்ளூர் நேரப்படி நண்பகல் 12.00 மணி வரை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே விமான நிலையத்தில் உள்ள விமானங்களின் புறப்பாடுகள் வழமை போல் இடம்பெற்று வருகின்றன.
புதிய கட்டுப்பாடுகள்
ஐரோப்பாவின் உயரமான மற்றும் செயலில் உள்ள எட்னா எரிமலை தொடர்ந்து சீற்றமடைந்து வருவதால், கெடானியா பகுதியில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

எரிமலையின் லாவா குழம்பைப் பார்வையிட சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் வழிகாட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.