ஆஃப்கானிஸ்தானில் திடீர் வெள்ளம்: 20 பேர் பலி
ஆஃப்கானிஸ்தானின் கிழக்கே அமைந்துள்ள நூரிஸ்தான் மாகாணத்தில் வீசிய பருவமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ள நீரில் சிக்கி இதுவரை குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
நூரிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான பாரூன் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ள நீர் குடியிருப்புகள், உணவகங்கள் மற்றும் கடைகளை அடித்துச் சென்று முற்றிலும் சேதப்படுத்தியுள்ளது.
மீட்புக் குழு
வெள்ளத்தில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். சேறு மற்றும் இடிபாடுகளுக்கு இடையே உயிருடன் இருப்பவர்களை மீட்கும் பணியிலும், உடல்களைக் கண்டெடுக்கும் பணியிலும் உள்ளூர் மக்களும் மீட்புக் குழுவினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பாரூன் நகரத்தின் மேயர் (முதல்வர்) மற்றும் அப்பகுதியின் பல அரசு ஊழியர்களும் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போயுள்ளதாக ஆஃப்கான் ஆளுநர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக அப்பகுதிக்கான போக்குவரத்து மற்றும் தொடர்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
கடும் வெள்ளப்பெருக்கு
தெற்காசிய பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள பருவமழையால் ஆஃப்கானிஸ்தான் மட்டுமின்றி இந்தியா, நேபாளம் உள்ளிட்ட அயல்நாடுகளிலும் கடும் வெள்ளப்பெருக்கும் சேதமும் ஏற்பட்டு வருகின்றன.

மேலும் பல மாகாணங்களில் பலத்த மழை மற்றும் வெள்ள அபாயம் நீடிப்பதால் ஆஃப்கான் தேசிய அனர்த்த முகாமைத்துவ ஆணைக்குழு மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு எச்சரித்துள்ளது.