மட்டக்களப்பு மாநகரசபையின் வரவு செலவுத்திட்டம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!
2022ம் ஆண்டுக்கான மட்டக்களப்பு மாநகரசபையின் வரவு செலவுத்திட்டம் ஊடாக கிராமத்திற்கு ஐந்து மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு மட்டக்களப்பு மாநகரசபையில் சுபிட்சத்தினை நோக்கிய ஒரு அபிவிருத்தியை முன்னெடுக்கவுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
2022ம் ஆண்டுக்கான மட்டக்களப்பு மாநகரசபையின் வரவு செலவுத் திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பு மாநகரசபையில் நடைபெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் கே.சத்தியசீலன் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள், மாநகரசபையின் கணக்காளர் ஜி.எச்.சிவராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது நிதிக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட எதிர்வரும் மாநகரசபை அமர்வில் முன்வைக்கப்படவுள்ள வரவு செலவு திட்ட அறிக்கை தொடர்பில் மாநகரசபை உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதுடன், அவர்களின் கருத்துகளும் அறியப்பட்டது.
இதன்போது மாநகரசபை உறுப்பினர்களினால் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டதுடன், கருத்து முரண்பாடுகளும் எழுந்தன. உறுப்பினர்களின் ஆலோசனைகளும் கேட்கப்பட்டதுடன், வரவு செலவு திட்டத்தில் உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அத்துடன் கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கான முன்வைக்கப்பட்ட பல செயற்பாடுகள் நிர்வாகத்தினால் நடைமுறைப்படுத்தாத நிலையில் மீண்டும் எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் கொண்டுவருவதில் பயனில்லையெனவும் இந்த ஆண்டுக்கான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்கப்போவதில்லையென மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான வேலைத்திட்டங்கள் மாநகரசபை நிர்வாகத்தினரால் முடிக்கப்படாவிட்டால் நிர்வாகத்திற்கான கொடுப்பனவினை நிறுத்தி ஏனைய நடவடிக்கைகளுக்கான கொடுப்பனவுகளை மட்டும் அங்கீகரிப்பதற்கான ஆதரவினை வழங்கவேண்டும் என இதன்போது முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதன்போது உறுப்பினர்களினால் குடும்பங்கள் தலைமை தாங்கும் பெண்களுக்கான வாழ்வாதார உதவி செயற்பாடுகள் மற்றும் விசேட தேவையுடையவர்களுக்கான உதவிகள் குறித்தும் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன்,
எதிர்வரும் ஆண்டுக்காக 452 மில்லியன் ரூபா வரவு செலவு திட்டம் ஊடாக ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.





