திருகோணமலை கடற்றொழில் குடும்பங்களின் வாழ்வாதாரம் குறித்து முன்வைக்கப்பட்ட கோரிக்கை
திருகோணமலை வீரநகர் கரையோர பகுதியில் அதிக காற்று மற்றும் கடல் அலையின் சீற்றம் காரணமாக கரையோர பகுதியில் உள்ள கடற்றொழிலாளர்களின் குடியிருப்பு பகுதி தாழ் இறங்கியுள்ளதால் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக அப்பகுதி கரையோர கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த கரையோரப் பகுதியில் ஏற்கனவே நான்கு வீடுகள் கடல் சீற்றம் காரணமாக தாழ் இறங்கி சேதமாக்கப்பட்ட நிலையில் ஒரு பகுதிக்கு மாத்திரம் கடல் அரிப்பை தடுக்க கருங்கல் இடும் நடவடிக்கை இடம் பெறுகிறது ஆனால் குறித்த கரையோரமானது 500 மீற்றருக்கும் மேலான தூரத்தை கொண்டுள்ளது.
இதனால் முழுமையாக கடல் அரிப்பை தடுத்து தங்களின் குடியிருப்புக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறும் கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
சிரமத்தில் கடற்றொழிலாளர்கள்
இது குறித்து மேலும் தெரிவித்த அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தற்போது வரைக்கும் எங்களுக்கு அரசாங்கம் ஊடாக எவ்வித உதவியும் கிடைக்கவில்லை. திட்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் கடல் தொழிலுக்காக இன்னும் இரு மாத காவமாக செல்லவில்லை.

கடலை நம்பியே வாழ்கிறோம் எமது மனைவி பிள்ளைகளும் எங்களை நம்பியே உள்ளனர். நாங்கள் நகரப் பகுதி மையத்தில் உள்ளோம் எமது பகுதி ஊடான கடல் அரிப்பை தடுக்க யாரும் நடவடிக்கை எடுக்கவோ பார்க்கவோ இல்லை எமது வீடுகள் மற்றும் கோயில் எல்லாம் இந்த கடல் அரிப்பால் இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
எமது பிள்ளைகள் வெளியில் இறங்கி நடமாட முடியாதளவுக்கு கடலின் தாக்கம் சூழ்ந்துள்ளது மீண்டும் ஒரு அபாய நிலையை எதிர்நோக்கியுள்ளோம். நாங்களும் இந்த நாட்டு பிரஜை என்ற வகையில் எமக்கு உதவி செய்ய யாரும் முன்வரவுமில்லை. எனவே தங்களையும் தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.


ரஷ்யாவுடன் இறுகும் போர்... பிரித்தானிய இராணுவத்திற்கு 28 பில்லியன் பவுண்டுகள் நிதி பற்றாக்குறை News Lankasri