சாகல கடற்தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்: விடுக்கப்பட்ட வேண்டுகோள்
ஜனாதிபதி செயலக பிரதானி சாகல ரத்நாயக்க இந்தியா சென்று கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் பேசும் முன்னர் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்களுடன் கலந்துரையாட வேண்டும் என யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கிராமிய அமைப்புக்களின் தலைவர் செல்லத்துரை நற்குணம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களையும் சம்பளத்தில் இன்று(06.03.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்றொழிலாளர் பிரச்சனை
அவர் மேலும் கூறுகையில்,
"இந்திய எல்லை தாண்டிய கடற்றொழிலாளர்களினால் நாம் பல்வேறு அசௌகரிகங்களை அனுபவித்துக் கொண்டு வரும் வகையில் தொடர்ச்சியாக பல்வேறுபட்ட போராட்டங்களை மேற்கொண்டு வருகிறோம்.
அண்மையில் கடலில் கறுப்புக் கொடிகளை தாங்கியவாறு இலங்கை கடல் எல்லை வரை எமது போராட்டம் சென்றது.
அதன் விளைவாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் இந்தியாவுடன் பேசுமாறு ஜனாதிபதி செயலகப்பிரதானி சாலக ரத்நாயக்ககவுக்கு பணிப்புரை வழங்கியிருந்தார். அதை நாம் வரவேற்கின்றோம்.
ஆனால் இந்தியா மத்திய அரசுடனோ தமிழ்நாட்டு அரசுடனோ இலங்கை கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் எதனை பேச போகிறோம் என பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களிடம் கேட்க வேண்டும்.
அல்லது பேச்சுவார்த்தைக்கு செல்லும்போது கடற்றொழிலாளர் பிரதிநிதிகளையும் அழைத்துச் செல்ல வேண்டும்.
அவ்வாறில்லாமல் வெறுமனே அரசியல் நீதியான பேச்சு வார்த்தைகளை நடத்திவிட்டு கடற்றொழிலாளர்களை ஏமாற்றக்கூடாது. ஏற்கனவே இவ்வாறு பல பேச்சுவார்த்தைகள் உறுதிமொழிகள் வழங்கப்பட்டு இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
ஆகவே இந்தியா அரசாங்கத்துடன் கடற்றொழிலாளர் விவகாரம் தொடர்பில் பேசுவதற்கு முன்னர் நல்லெண்ண அடிப்படையாக இந்திய கடற்றொழிலாளர்கள் யாழ் கடற் பகுதிக்கு வருவதை நிறுத்துவதை இந்தியா மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்" என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |