தங்கச்சி மடத்தில் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கடற்றொழிலாளர்கள்
எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் அடுத்த தங்கச்சி மடத்தில் இன்றைய தினம் (28) காலை முதல் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு படகு அரசுடைமையாக்க பட்டு வருவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 23ஆம் திகதி இராமேஸ்வரத்தில் இருந்து கடற்தொழிலுக்குச் சென்ற ஐந்து படகையும் அதிலிருந்த 32 கடற்தொழிலாளர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
உணவுத் தவிர்ப்பு போராட்டம் இரவு பகலாக
மேலும் சிறை தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடை சிறையில் 50 க்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சிறை கைதிகளாகவும் 50க்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் நீதிமன்ற காவலில் உள்ளனர்.
கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் கிடப்பில் போடப்பட்டுள்ள இந்திய இலங்கை கடற்றொழிலாளர் பேச்சுவார்த்தையை துரிதப்படுத்தி உடனடியாக கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற மத்திய அரசு நடவடிக்கை வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
இந்த உணவுத் தவிர்ப்பு போராட்டத்திற்கு அதிமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், எஸ்டிபிஐ உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த உணவுத் தவிர்ப்பு போராட்டம் இரவு பகலாக நடைபெறும் எனவும் மத்திய அரசு படகையும் கடற்றொிழிலாளர்களையும் விடுதலை செய்வதாக உறுதியளித்தால் மட்டுமே இந்த போராட்டம் கைவிடப்படும் என கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.
தங்கச்சி மடத்தில் நடைபெறும் உணவுத் தவிர்ப்பு போராட்டம் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் தங்கச்சிமடம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


