20 வருடமாக அடிப்படை வசதி இல்லாத கடற்றொழில் எழுச்சி கிராம மக்கள்.. ஜனாதிபதிக்கு அவசர கடிதம்
மட்டக்களப்பு - பாலமீன்மடு கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் கடந்த 20 வருடமாக வாழ்ந்து வரும் மக்களின் அவலங்களை போக்குமாறு ஜனாதிபதி மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருக்கு அவசரமாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக ஈ.பி.டி.பி கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.
பாலைமீன் மடுவில் உள்ள அவரது காரியாலயத்தில் நேற்று (29) இடம்பெற்ற வாராந்த ஊடக மாநாட்டில் கட்சியின் மாவட்ட இணைப்பாளர் சிவானந்தராஜா, மற்றும் ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும், "மட்டக்களப்பு கடற்றொழில் எழுச்சி கிராமம் 50 வீட்டுத்திட்டம் கடந்த 2000ஆம் ஆண்டு உருவாக்கி குடியேற்றப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது.
தனிநபருக்கு குத்தகை
இந்த நிலையில் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தினால் இந்த வீட்டுத்திட்டம் பாதிக்கப்;பட்டதையடுத்து ஒரு சிலருக்கு மாற்று காணிகள் வழங்கப்பட்டு சுவிஸ் கிராமத்தில் குடியேற்றப்பட்டனர்.

அதன் பின்னர் 2006ம் ஆண்டு பாதிக்கப்பட்ட கடற்றொழில் கிராமத்தில் ஒரு சிலர் குடியேறி தொடர்ந்து 30 குடும்பங்கள் இன்று வரையும் வாழ்ந்து வருகின்றனர் இவர்களுக்கான காணி ஆவணங்கள் இதுவரை வழங்கப்படவில்லை.
இந்த கடற்றொழில் எழுச்சி கிராமாக அமைக்கப்பட்ட அந்த காணியில் உல்லாச விடுதி ஒன்று நிர்மாணிப்பதற்காக 2014ஆம் ஆண்டு அப்போது இருந்த பிரதேச செயலாளர் ஒரு தனிநபருக்கு குத்தகைக்கு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
இதன்போது பாலைமீன் மடுவில் உள்ள பொது நல அமைப்புகள் ஆலய நிர்வாகம் அதற்கு எதிர்த்து அதனை தடை செய்ய வேண்டும் என அப்போது இருந்த ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து 2015ஆம் ஆண்டு அனுமதி வழங்கிய பிரதேச செயலாளரால் அது இரத்து செய்யப்பட்டது.
இன்று அந்த மக்களுக்கு காணி ஆவணங்கள் வழங்காமல் இது அனர்த்த வலயமாக அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே அந்த இடம் ஹோட்டல் கட்ட அப்போது அனர்த்த வலயம் இல்லை அனுமதி வழங்குகிறார்கள் அந்த ஊரிலே பிறந்த காணி இல்லாத மக்கள் குடியிருப்பது அனர்த்த வலயமா?” என கேள்வி எழுப்பினார்.