இணைய பாதுகாப்புச் சட்டத்தின் கீழான முதலாவது மனு தொடர்பில் ஆட்சேபனைகள் முன்வைப்பு
புதிதாக நடைமுறைபடுத்தப்பட்ட இணைய பாதுகாப்புச் சட்டத்தின் (online safety bill) கீழ் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட முதலாவது மனு தொடர்பில், பிரதிவாதி தரப்புக்கள் ஆட்சேபனைகளை முன்வைத்துள்ளன.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கவுக்கு எதிராகப் பொய்யான தகவல்களைத் தெரிவிப்பதைத் தடுக்கும் வகையில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், ஏப்ரல் 4ஆம் திகதி நிபந்தனையுடன் கூடிய உத்தரவைப் பிறப்பித்தது.
நீதிமன்ற உத்தரவு
2024 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க இணையப் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில், மனுதாரர் ஜனக ரத்நாயக்கவுக்கு ஆதரவாக நீதிமன்றம் இந்த நிபந்தனை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவை பிரதிவாதிகளான காயத்திரி பிம்பா, பேராசிரியர் ராஜபக்ச, ஓஷல ஹேரத், யசலால் பெரேரா, கல்பா குணரத்ன மற்றும் ஜமுனி கமந்த துஷார ஆகியோருக்கு அறிவிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தநிலையில், பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, அதிகார வரம்பில்லாமை காரணமாக விண்ணப்பத்தை பேணுவதற்கு சவால் விடுக்கும் வகையில் ஆட்சேபனைகளை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கொழும்பு மேலதிக நீதவான் தரங்க மஹவத்தவினால் இந்த வழக்கு மே மாதம் 2 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஜனக ரத்நாயக்க தனது மனுவில், பிரதிவாதிகள் தனிப்பட்ட தகவல்களை பரப்பியதாக அல்லது பரப்ப முயற்சித்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |