மட்டக்களப்பில் முதலாவது ஒட்சிசன் உற்பத்தி நிலையம் திறந்துவைக்கப்பட்டது (VIDEO)
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் உள்ள ஒட்சிசன் தேவையினை நிவர்த்திக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது ஒட்சிசன் உற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் இந்த ஒட்சிசன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது.
சுகாதார அமைச்சின் அனுசரனையுடனும் மலேசியாவின் அலாக்கா அமைப்பு மற்றும் மட்டக்களப்பில் உள்ள நாம் சமூகம் அமைப்பு ஆகியவற்றின் பங்களிப்புடன் சுமார் 65மில்லியன் ரூபா செலவில் இந்த ஒட்சிசன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுவரையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு கொழும்பு, அநுராதபுரம், மாஹோ ஆகிய பகுதிகளிலிருந்தே இதுவரை ஒட்சிசன் பெற்றுவந்த நிலையில் களுவாஞ்சிகுடியில் நிர்மாணிக்கப்பட்ட ஒட்சிசன் உற்பத்தி நிலையம் ஊடாக இனி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு ஒட்சிசன் வழங்கமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஒட்சிசன் உற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டதுடன் அதன் உற்பத்திகளும் ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து கோவிட் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு எடுத்த நடவடிக்கையினை பாராட்டி சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்த்தன உட்பட அமைச்சின் உயர் அதிகாரிகள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.











