பிரான்சில் முதல் எபோலா பாதிப்பு உறுதி: கொங்கோவில் இருந்து நாடு திரும்பிய மருத்துவருக்கு தொற்று
ஆபிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசில் மனிதாபிமானப் பணிகளை முடித்துவிட்டு பிரான்ஸ் திரும்பிய மருத்துவர் ஒருவருக்கு எபோலா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போதைய எபோலா பரவலில் பிரான்சில் பதிவாகியுள்ள முதல் பாதிப்பு இதுவாகும்.
பாதிக்கப்பட்ட மருத்துவர் பிரான்ஸ் வந்தடைந்த உடனேயே, கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி தனிமைப்படுத்தப்பட்டு, அதிநவீன மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பிரத்தியேக மருத்துவ சிகிச்சைகள் இல்லை
மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் பணிகளை சுகாதாரத் துறையினர் முடுக்கிவிட்டுள்ளனர்.
அவ்வாறு கண்டறியப்படுபவர்கள் 21 நாட்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய ஆப்பிரிக்க நாடான கொங்கோவின் இத்துரி மாகாணத்தில் கடந்த மே மாதம் முதல் எபோலா வைரஸ் தீவிரமாகப் பரவி வருகிறது. இதுவரை அங்கு 260க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு, ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அச்சுறுத்தல் காரணமாக கடந்த மே 17 அன்று உலக சுகாதார நிறுவனம் (WHO) சர்வதேச அளவிலான பொதுச் சுகாதார அவசரநிலையை அறிவித்தது.
இதற்குமுன் கொங்கோவில் ஏற்பட்ட பெரும்பாலான எபோலா பரவல்கள் 'ஜையர்' என்ற வைரஸ் வகையால் உண்டானவை. ஆனால், தற்போது பரவி வரும் தொற்று 'புந்திபுக்யோ' என்ற புதிய வகையைச் சேர்ந்ததாகும்.
இந்த குறிப்பிட்ட எபோலா வைரஸ் வகைக்கு தற்போது வரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது பிரத்தியேக மருத்துவ சிகிச்சைகளோ இல்லை என்பது உலக சுகாதார அமைப்பினரை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.