மன்னாரில் தொடரும் அவலம் : நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்து
மன்னார் - துணுக்காய், உயிலங்குளத்தின் அலைகரைப் பகுதிக்கு மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் கொல்லப்பட்டு வருவதால் கால்நடை வளர்ப்போர் பாரிய இடையூறுகளைச் சந்தித்து வருகின்றனர்.
இந்நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வந்த போதும் இதுவரை அவற்றை தடுப்பதற்கான எந்த நடவடிக்கைகளும் உரிய தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவில்லை.
வாழ்வாதரமாக கால்நடைகளை வழங்கி வரும் சூழலில் அவற்றை பாதுகாப்பாக வளர்த்துக்கொள்ள முடியாத நிலை தொடர்ந்து வருவது ஒன்றுக்கொன்று முரணான நிலைகளாக சமூகவியலாளர்களால் நோக்கப்படுகிறது.
துப்பாக்கி பிரயோகம்
இடியன் துப்பாக்கியை பயன்படுத்தி மாடுகளை வேட்டையாடிச் சாப்பிடும் சிலராலேயே இந்த அவல நிலை தொடர்வதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
தேறாங்கண்டலைச் சேர்ந்த ஒரு சில நபர்கள் இவ்வாறு கால்நடைகள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து அவற்றை கொன்று உணவுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
பலனளிக்காத முறைப்பாடு
இது தொடர்பில் பாதிக்கப்பட பல கால்நடை வளர்ப்போரால் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் பல தடவைகள் முறைப்பாடு செயப்பட்டுள்ளது.
ஆயினும் இதுவரை உரிய நடவடிக்கைகள் மூலம் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவில்லை என துணுக்காய் - உயிலங்குளத்தினைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவரால் சுட்டிக்காட்டப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
கால்நடைகள் திட்டமிட்ட முறையில் களவாடப்படுதல் தொடர்ந்து வரும் நிலையில் அவற்றை தடுத்து கால்நடைகளை பாதுகாப்பதில் கால்நடை வளர்ப்போர் சங்கங்கள் கையாலாகாத நிலையினை வெளிப்படுத்தி வருகின்றன.
வன்னியில் தொடரும் அவலம்
வன்னியில் பரவலாக எல்லா இடங்களிலும் கால்நடைத் திருட்டு நடைபெற்று வந்த போதும் அவற்றை தடுப்பதற்கு இதுவரை நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படாதது கவலைக்குரிய விடயமாகும்.
நீதிமன்றத்தில் குற்றச் செயல்களுக்காக வழக்கை எதிர்கொண்டிருக்கும் பல நபர்கள் கால்நடைத் திருட்டுடன் தொடர்புபட்டிருப்பதும் அவதானிக்க முடிகின்றது.
பொலிஸாரிடம் செல்லும் கால்நடைத் திருட்டு தொடர்பான முறைப்பாடுகளை அவர்கள் அதிக அக்கறை எடுத்து விசாரணைக்குட்படுத்தி நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் தீர்வுகளை பெற்றுக்கொடுக்காத மெத்தனப் போக்கையும் அவதானிக்க முடிகின்றது.
பொருளாதார வலுநிலைக்கு பாரியளவில் துணை நிற்கும் கால்நடை வளர்ப்பு கட்டுப்படுத்த முடியாத திருடர்களின் செயற்பாடுகளால் பாதிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கைகள் தேவை என்பது உணரப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |