நுவரெலியாவில் வீடொன்று முற்றாக தீக்கிரை
நுவரெலியா - பொரலாந்த, வஜிரபுற பிரதேசத்தில் உள்ள வீடொன்று தீப்பிடித்து முற்றாக எரிந்துள்ளது.
இன்று அதிகாலை குறித்த தீ விபத்து ஏற்பட்டதாக வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வீடு திடீரென தீப்பிடித்து எரிவதனை அவதானித்த அயலவர்கள் தீயை அணைக்க முயற்சித்த போதிலும் வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்களும், முக்கிய ஆவணங்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
மேலதிக விசாரணை
தீ விபத்தில் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை எனவும் இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களை தற்காலிக இடத்தில் தங்க வைக்க கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளரினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் வீட்டில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக இந்த விபத்து நேர்ந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.