அமெரிக்க விமானப் போக்குவரத்தில் பெரும் முடக்கம்! ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய விமானப் போக்குவரத்து தடைகள் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை நீடிக்கக்கூடும் என அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகத்தின் (FAA) தலைவர் பிரையன் பெட்ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை மட்டும் அமெரிக்காவில் 6,400-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விமானப் போக்குவரத்து தடைகள்
மேலும் 8,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமடைந்துள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நாடு தழுவிய விமானத் தடை காரணமாக சுமார் 9,200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமைக்கான 875 விமானங்களும் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து ஒப்பந்த நிறுவனமான L3Harris நிறுவிய புதிய Router-இல் ஏற்பட்ட கோளாறே இந்தப் பாதிப்புக்குக் காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய Router காரணமாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையங்களின் தகவல் தொடர்பு அமைப்புகளில் அதிகப்படியான தரவுப் பரிமாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனால் FAA-வின் 22 விமானக் கட்டுப்பாட்டு மையங்களில் 17 மையங்களின் தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டது.
தற்போதைய நெருக்கடி
இது சைபர் தாக்குதலா அல்லது தொழில்நுட்பக் கோளாறா என முதலில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தற்போது Router நிறுவலில் ஏற்பட்ட பிரச்சினை காரணம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
Delta, United மற்றும் American Airlines நிறுவனங்கள் சனிக்கிழமை தங்களது விமானங்களில் சுமார் 25% சேவைகளை ரத்து செய்துள்ளன. JetBlue நிறுவனம் சுமார் 45% விமானங்களை ரத்து செய்துள்ளது.

இதனால் பல்லாயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், அமெரிக்க விமானப் போக்குவரத்துக் கட்டமைப்பை நவீனப்படுத்துவதற்காக போக்குவரத்துத் துறை அமைச்சர் சீன் டஃபி, 50 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி கோரியுள்ளார்.
பழைய தொழில்நுட்பக் கட்டமைப்புகள், தகவல் தொடர்பு பிரச்சினைகள் மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் வெற்றிடங்களே தற்போதைய நெருக்கடிக்குப் பின்னணியாக உள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.