கொழும்பில் இயங்கி வரும் மூன்று சீன உணவு வணிக நிறுவனங்களுக்கு அபராதம்
கொழும்பில் இயங்கி வரும் மூன்று சீன உணவு வணிக நிறுவனங்களுக்கு, உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய 148 சம்பவங்களுக்காக மொத்தம் 444,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் (PHIs) மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில், மாநகர சபை முன்னெடுத்த சட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இந்த அபராதங்களை விதித்தது.
இந்த வணிக நிறுவனங்களில், கொழும்பிலுள்ள ஒரு பிரபலமான வணிக வளாகத்திற்குள் இயங்கும் இரண்டு சீன உணவகங்களும், ஒரு ஐஸ்கிரீம் நிறுவனமும் அடங்கும்.
சட்ட நடவடிக்கை
உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியமை தொடர்பான 120 குற்றச்சாட்டுகளில் இந்த இரண்டு உணவகங்களும் குற்றவாளியாகக் காணப்பட்டதைத் தொடர்ந்து, அவற்றுக்கு மொத்தம் 360,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

திடீர் ஆய்வுகளின் போது, முறையான லேபிள்கள் (அடையாளக் குறிப்புகள்) இன்றி இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதையும், பயன்படுத்தப்படுவதையும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கண்டறிந்தனர்.
மேலும், காலாவதியான உணவுப் பொருட்களும் அங்கு இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். இதனையடுத்து, குறித்த உணவகங்களை நடத்தி வரும் நிறுவனங்களுக்கு எதிராக கொழும்பு மாநகர சபை சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியது.
அபராதம்
இதனைத் தொடர்ந்து, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் அந்த இரண்டு வணிக நிறுவனங்களுக்கும் மொத்தம் 360,000 ரூபா அபராதம் விதித்தது.

இவ்வாறு, உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய 148 சம்பவங்களுக்காக, இந்த மூன்று வணிக நிறுவனங்களுக்கும் சேர்த்து மொத்தம் 444,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.