நுண் கடன் நிதி நிறுவனங்கள் தொடர்பில் வலிகாமம் பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம்
2026ஆம் ஆண்டிலிருந்து வலி. மேற்கு பிரதேசசபைக்குள் செயல்படுகின்ற, நுண் கடன்களை வழங்குகின்ற நிதி நிறுவனங்கள் அனைத்தும் வலிகாமம் பிரதேச சபையில் அனுமதி பெற வேண்டும் என்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றையதினம் தவிசாளர் சண்முகநாதன் ஜயந்தன் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிதி நிறுவனங்களை கையாள வேண்டிய தேவை
குறித்த விடயம் தொடர்பான பிரேரணையை முன்மொழிந்த தவிசாளர் கருத்து தெரிவிக்கையில், நிதி நிறுவனங்கள் ஏற்கனவே மத்திய வங்கியில் பதிவுபட்டாலும் கூட எமது பிரிவான வலிகாமம் மேற்கு பகுதிக்குள் உள்ள நிதி நிறுவனங்களை கையாள வேண்டிய தேவை எங்களிடம் உள்ளது.

நுண்கடன் நிதி நிறுவனங்களின் பிரச்சினைகள் அதிகரித்துக் கொண்டு செல்கின்றன. அவர்கள் எங்களிடம் அனுமதிகள் எடுக்கின்றார்கள். இருந்தாலும் அதிகளவான வட்டி வீதங்களை அவர்கள் அறவிடுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுகின்றன. இதற்கு எதிரான நடவடிக்கைகள் வெவ்வேறு பிரதேச சபைகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தீர்மானத்தை எடுப்பதற்கான அனுமதி
மத்திய வங்கியின் வட்டி வீதங்களை மீறாது செயற்படுமிடத்து அவர்கள் எமது பிரதேச சபை எல்லைக்குள் செயற்படுவதற்கான அனுமதியை 2026ஆம் ஆண்டிலிருந்து கொடுப்பது என்றும், குடிபுகுதல் சான்றிதழை அந்த நிறுவனமானது கட்டாயம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தையும் இந்த சபையில் எடுப்பதற்கு அனுமதி கோருகின்றேன் என்றார்.

தவிசாளரின் குறித்த பிரேரணைக்கு அனைத்து உறுப்பினர்களும் ஏக மனதாக சம்மதம் தெரிவித்ததுடன், இவ்வாறான நிதி நிறுவனங்களால் சமூகத்தில் இடம்பெறும் தற்கொலை, மனவுளைச்சல் போன்ற பிரச்சினைகளையும் சுட்டிக்காட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |