மகிந்த கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தாக்கப்பட்ட விவகாரம் : பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்கள்
நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ச தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் 3 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வாக்குமூலங்கள் நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து பதிவு செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான சஹான் பிரதீப், மதுர விதானகே மற்றும் லலித் வர்ணகுமார ஆகியோரிடமே வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.
அறிக்கை தாக்கல்
பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் உடனடியாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
எவ்வாறாயினும், தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகேவிடம் இதுவரை வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த திங்கட்கிழமை மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர் இந்த தாக்குதல் இடம்பெற்றதாக கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே நடத்திய தாக்குதலினால் நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்சவின் கால் முறிந்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் குணதிலக்க ராஜபக்ச தற்போது இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |