மட்டக்களப்பு மாநகரசபையின் ஐந்தாவது அமர்வு
மட்டக்களப்பு மாநகரசபையின் ஐந்தாவது அமர்வில் குழப்பங்களுக்கு மத்தியில் பல்வேறுபட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன் பல்வேறு தனிநபர் பிரேரணைகளும் நிறைவேற்றப்பட்டன.
மட்டக்களப்பு மாநகரசபையின் ஐந்தாவது அமர்வு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.
மாநகரசபையின் சம்பிரதாயங்களுக்கு அமைவாக மாநகரசபை முதல்வர், பிரதி முதல்வர் அழைத்துவரப்பட்டு மாநகரசபையின் அமர்வு நடவடிக்கைகள் ஆரம்பமானது.
மாநகரசபையின் கீதம் இசைக்கப்பட்டதை தொடர்ந்து மௌன இறைவணக்கத்துடன் அமர்வின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் மாநகரசபை முதல்வரினால் தலைமையுரை நிகழ்த்தப்பட்டு சென்ற அமர்வின் கூட்டறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானங்கள் நிறைவேற்றம்
அதனை தொடர்ந்து முதல்வரினால் முன்மொழிவுகள் வாசிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டபோது பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றதுடன் முன்மொழிவுகள் நிறைவேற்றப்பட்டன.
இதன்போது மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் 20 வட்டாரங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ள இந்த ஆண்டுக்கான வீதி அபிவிருத்தி பணிகள் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் பல்வேறு வாதப்பிரதிவாதங்களும் நகைச்சுவை நிகழ்வுகளும் நடைபெற்றதை காணமுடிந்தது.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் வட்டாரத்தில் தெரிவுசெய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் குறித்த வட்டாரத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை தன்னிடம் வழங்குமாறு கோரியபோது சலையில் சலசலப்பும் சிரிப்பொலியும் எழுந்த நிலையில் பல்வேறு வாதப்பிரதிவாதங்களும் நடைபெற்றன.
இதேபோன்று மட்டக்களப்பு நகருக்குள் இலங்கைப் போக்குவரத்து சபை பேருந்து நிலையம், தனியார் பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதிகளுக்கு நடுப்பகுதியில் கடந்தகால மாநகரசபையினால் பாலுட்டும் பெண்கள் மற்றும் நகருக்கும் வரும் பெண்களின் நன்மை கருதி அமைக்கப்பட்ட தங்குமிட விடுதியை தற்போது தினவாடகைக்கு அனைவருக்கும் வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுதாக மாநகரசபை உறுப்பினர் தயாளகௌரியினால் குற்றஞ்சாட்டப்பட்டது.
ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கை
குறித்த கட்டடத்தினை மாநகரசபை மீண்டும் மட்டக்களப்பு நகருக்கு பெண்கள் பயன்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும் என முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மட்டக்களப்பு நகரம் பாரிய இடநெருக்கடியை எதிர்கொண்டுவருவதன் காரணமாக மட்டக்களப்பு நகருக்கு மத்தியில் உள்ள பொலிஸ் தங்குமிட விடுதியை பொறுப்பேற்று அதில் வாகனத்தரப்பிடத்துடன் கூடிய கடைத்தொகுதி அமைக்கப்பட வேண்டும் என தேசிய மக்கள் சக்தி மாநகரசபை உறுப்பினர் துதீஸ்வரனால் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டது.
பொதுச்சந்தைக்கு சொந்தமான குறித்த காணியானது நீண்டகாலமாக பொலிஸ் விடுதி இயங்கிவரும் நிலையில் தற்போதைய நகரின் நெருக்கடியை கருத்தில்கொண்டு அதனை மீள மாநகரசபை பொறுப்பேற்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். தேசிய மக்கள் சக்தி மாநகரசபை உறுப்பினர் ஒருவர் முதன்முறையாக ஒரு பிரேரணை கொண்டுவரப்பட்ட முதல் சந்தர்ப்பமாக இன்றைய இந்த பிரேரணை கருதப்படுகின்றது.
மட்டக்களப்பு நகரினை அழகுபடுத்தவும் மாநகரசபைக்குள் ஏற்பட்டுள்ள இடநெருக்கடியை நிவர்த்திசெய்யும் வகையில் குறித்த காணியைப் பெற்று வாகன தரிப்பிடம் மற்றும் கடைத்தொகுதிகளுடன் கூடிய சுப்பர் மார்க்கட் அமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்ததுடன் அந்த பிரேரணை சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஏற்பட்டுள்ள நெருக்கடி
இதேபோன்று மட்டக்களப்பு கல்லடி பகுதியானது சுற்றுலாத்துறையில் அபிவிருத்தி அடைந்துவரும் நிலையில் அங்குள்ள பாரிய இராணுவம் முகாம் ஊடாக பல்வேறு இடங்களுக்கான போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளதன் காரணமாக பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதன் காரணமாக குறித்த வீதிகளை விடுவிப்பு செய்ய நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் அருணனால் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டது.
கல்லடி இராணுவமுகாம் அமைந்துள்ளதன் காரணமாக மூன்று பிரதான வீதிகளின் போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன. கடற்கரையினை அண்டிய பகுதி என்பதன் காரணமாக சுற்றுலாப்பயணிகள் தமது பயணத்தினை சிறப்பாக செல்லமுடியாத நிலையுள்ளது. இந்த வீதிகளை திறந்து பொதுமக்களும் சுற்றுலாப்பயணிகளும் தமது பயணங்களை தொடர ஏற்பாடுகளை செய்துதரவேண்டும் என அவர் கோரிக்கையினை முன்வைத்தபோது அதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
இதேபோன்று மட்டக்களப்பு மாநகரசபையில் செயற்படும் நிலையியல் குழுக்களும் தமது தீர்மானங்களையும் மேற்கொள்ளவேண்டிய செயற்பாடுகளையும் சபையில் முன்வைத்துடன் தனிநபர் பிரேரணைகளும் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இதன்போது மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் இருக்கும் இலங்கை போக்குவரத்துசபை சாலையிலிருந்து வடிகான்கள் ஊடாக ஒயில் வெளியேற்றப்படுவதன் காரணமாக அது ஆற்றினை அடையும்போது வாவி அசுத்தம் அடையும் நிலையேற்படுவதாகவும் இது தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும் என மாநகரசபை உறுப்பினர் ஜனகனினால் சபையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.










