ஜனாதிபதி தலைமையில் நாடாளுமன்றத்தில் ஐந்தாவது கூட்டத்தொடர்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐந்தாவது கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.
இதனைமுன்னிட்டு இன்று நடைபெறவுள்ள நாடாளுமன்றத்தின் புதிய அமர்வு தொடர்பான ஒத்திகையொன்று நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றுள்ளது.
அரசியலமைப்பின் 33வது உறுப்புரையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (07) மு.ப 10.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைக்கவுள்ளார்.
ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு வருகைதரும் நிகழ்வை மிகவும் எளிமையான முறையில் நடத்துமாறு அவர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கமைய மரியாதை வேட்டுக்கள் தீர்த்தல் மற்றும் வாகனத் தொடரணி என்பன இடம்பெறாது என நாடாளுமன்ற படைக்கலச் சேவிதர் குஷான் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
கொள்கைப் பிரடகன உரை
பிரதிப் படைக்கல சேவிதர், செங்கோலைக் கையில் தாங்கியவாறு படைக்கல சேவிதர், ஜனாதிபதி, சபாநாயகர், செயலாளர் குழு மற்றும் பிரதிப் படைக்கல சேவிதர் ஆகியோர் அணிவகுத்து சபா மண்டபத்துக்கு அழைத்துவரப்படும் ஜனாதிபதி அங்கிராசனத்தில் அமர்ந்து சபைக்குத் தலைமை தாங்குவார்.
இதன்போது சபாநாயகர், நாடாளுமன்ற குழுநிலையின்போது அமரும் கீழ் பகுதியிலுள்ள ஆசனத்தில் செயலாளர் குழுவுடன் அமர்ந்திருப்பார்.
இதனைத் தொடர்ந்து ஜனாதிபதியினால் அரசாங்கத்தின் கொள்கைப் பிரடகன உரை நிகழ்த்தப்பட்டு, சபை 08ஆம் திகதி மு.ப 9.30 மணிவரை ஒத்திவைக்கப்படும்.
சபை ஒத்திவைக்கப்பட்டதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்களுக்கு தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரை வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் வெளிநாட்டு இராஜதந்திரிகள், முன்னாள் ஜனாதிபதி, பிரதம நீதியரசர், சட்டமா அதிபர், பாதுகாப்புச் செயலாளர், முப்படைத் தளபதிகள் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட விசேட விருந்தினர்கள் கலந்துகொள்ளவிருப்பதாக படைக்கல சேவிதர் குஷான் ஜயரத்ன தெரிவித்துள்ளார். விருந்தினர்களுக்கான அழைப்பிதழ்கள் இலத்திரனியல் முறையில் (E - Invitations) அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |