கிளிநொச்சியில் நெல் எரிபந்த நோயினால் பாதிக்கப்பட்ட வயல்களை பார்வையிட்டுள்ள பத்தலகொட நெல் ஆராய்ச்சி நிலைய குழுவினர்
கிளிநொச்சி மாவட்டத்தில் நெற்பயிர்களில் ஏற்படும் நெல் எரிபந்த நோய் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்வதற்காக பத்தலகொட (BG) நெல் ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் ஜயந்த சேனநாயக்க உள்ளிட்ட குழுவினர் கிளிநொச்சிக்கு விஜயம் மேற் கொண்டுள்ளனர்.
அவர்கள் கோணாவில் பகுதியில் நெல் எரிபந்த நோயினால் பாதிக்கப்பட்ட வயல்களைப் பார்வையிட்டு பரிசோதனைக்காக நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகிய நெற்கதிர்களின் மாதிரிகளையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
பிரதி மாகாண விவசாய பணிப்பாளரின் முறைப்பாட்டினையடுத்து பத்தலகொட நெல் ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி ஜயந்த சேனநாயக்க மற்றும் அவர் சார்ந்த குழுவினர்கள் கோணாவில் பிரதேசத்திற்குக் கள விஜயத்தினை மேற்கொண்டு மிகக் கடுமையாக நெல் எரிபந்த நோயினால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களைப் பார்வையிட்டு நோய் மாதிரிகளையும் தமது ஆராய்ச்சிக்காக எடுத்துச் சென்றனர்.
இவர்களுடன் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர், பிரதேச விவசாயப் போதனாசிரியர், பரந்தன் நெல் ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் சிவநேசன் மற்றும் கமக்கார அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.