இந்தியாவிலிருந்து கடல் மற்றும் ஆகாய போக்குவரத்து சேவையை முன்னெடுக்க கள ஆய்வு (Photos)
இந்தியாவிலிருந்து கடல் மற்றும் ஆகாய போக்குவரத்து சேவையை முன்னெடுக்க பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றின் நிலைமைகள் குறித்து அமைச்சர்களான நிமால் சிறிபாலடி சில்வா மற்றும் அமைச்சர் டக்ளஸ் நேரில் சென்று ஆராய்ந்துள்ளனர்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கமைய கள ஆய்வை மேற்கொள்ளக் கொழும்பிலிருந்து இன்று யாழ்ப்பாணத்திற்கான கடுகதி புகையிரதத்தில் வருகைதந்த துறைசார் அமைச்சரான நிமால் சிறிபால டி சில்வாவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் பொன்னாடை போர்த்தி வரவேற்றிருந்தார்.
இதனையடுத்து இரு அமைச்சர்களும் குறித்த பகுதிகளுக்கான கள விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.
பாண்டிச்சேரி - காங்கேசன்துறைக்கும் இடையிலான படகு போக்குவரத்து
இந்தியாவின் பாண்டிச்சேரி உள்ளிட்ட துறைமுகங்களுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான படகுப் போக்குவரத்து மற்றும் பலாலி - திருச்சி இடையிலான விமானப் போக்குவரத்து போன்றவற்றை மீண்டும் ஆரம்பிப்பதற்குத் தொடர் முயற்சிகளில் ஈடுபட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இறுதியாக நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் குறித்த விடயத்தினை பிரஸ்தாபித்திருந்தார்.
இதையடுத்து குறித்த செயற்பாட்டை முன்னெடுப்பதற்குக் கடந்தவாரம் நடைபெற்ற அமைச்சரவையில் ஒப்புதலும் வழங்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, போக்குவரத்துக்களைச் செயற்படுத்துவதற்கான கள ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கு அமைய துறைசார் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து காங்கேசன்துறை மற்றும் பலாலி விமான நிலையத்தைப் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு சிறப்பு விஜயமொன்றை, துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேற்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணம் விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராயும் முகமாக இவ்விஜயம் இடம்பெற்றுள்ளது.