செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் இரண்டாம் நாள்
செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பிரக்ஞானந்தா - மேக்னஸ் கார்ல்சன் இடையிலான இரண்டாவது சுற்று ஆட்டமும் சமநிலையில் முடிவடைந்துள்ளது.
செஸ் உலகக்கோப்பைத் தொடர் அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதன் இறுதிப்போட்டியில் 18 வயதான தமிழக வீரர் பிரக்ஞானந்தா உலகின் முதல்நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து விளையாடி வருகிறார்.
இரண்டாவது சுற்று
இதன் இறுதிப்போட்டியின் முதல் சுற்று ஆட்டம் சமநிலையில் முடிவடைந்துள்ள நிலையில், இரண்டாவது சுற்று ஆட்டம் இன்று மாலை ஆரம்பமாகி நடைபெற்றது.
இன்றைய ஆட்டத்தில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா கறுப்பு நிற காய்களுடனும், மேக்னஸ் கார்ல்சன் வெள்ளை நிற காய்களுடனும் ஆட்டத்தை ஆரம்பித்தனர்.
ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக மேக்னஸ் கார்ல்சன் அடுத்தடுத்து அதிரடியான நகர்வுகளை மேற்கொள்ள, இருவருமே தங்களின் ராணிகளையும் இழந்தனர்.
இதன்பின் அடுத்தடுத்து 5 நகர்வுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பின்னர் இருவரும் தங்களின் யானைகளை இழந்தனர்.
மேக்னஸ் கார்ல்சனின் ஒவ்வொரு நகர்வும் சமநிலைக்கான ஆட்டமாக இருந்த நிலையில், ஆட்டம் இறுதியில் சமநிலையுடன் முடிவடையும் என்று கணிக்கப்பட்டது.
அதற்கேற்ப 30 நகர்வுகளுக்கு பின் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.
இதன் காரணமாக டை-பிரேக்கர் சுற்றுக்கு போட்டி சென்றுள்ளது.