சுவிற்சர்லாந்து அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா
ஐரோப்பாவில் பிரசித்தி பெற்ற ஆலயமாக விளங்கும் சுவிற்சர்லாந்து செங்காலன் சென்மார்க்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழாவில் மகோற்சவம் உற்சவம் பக்திபூர்வமாக சிறப்பாக இடம்பெற்றது.
சுவிற்சர்லாந்தில் செயற்பாட்டிலுள்ள சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா கடந்த 22.05.2021 அன்று வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி பகல், இரவு திருவிழாக்கள் என தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கடந்த 22.05.2021 அன்று நண்பகல் 12 மணியளவில் ஆலயபிரதம குரு சிவாகமரத்தின சிவஸ்ரீ முத்து மீனாட்சிசுந்தரம் முத்துசாமி சிவாச்சாரியார் அவர்கள் அந்தணர்கள் வேதஒலி முழங்கவும், பக்தர்களின் அரோகரா கோஷத்துடனும் கொடியேற்றினார்.
தொடர்ந்து 2ஆம் நாள் சட்கோணத்திருவிழாவும், 3ஆம் நாள் சக்திரூபத்திருவிழாவும், 4ஆம் நாள் குருந்தமரத் திருவிழாவும் தத்ரூபமாக நடைபெற்றன.
5ஆம் நாள் கப்பலில் கதிர்வேலாயுதர் வீதியுலா வந்தார். 6 ஆம் நாள் மாம்பழத்திருவிழாவும் சிவன் பார்வதி, பிள்ளையார், பழனியாண்டவர் என மும்மூர்த்திகளுடன் சிறப்பாக இடம்பெற்றன.
7ஆம் நாள் திருவிழா வேட்டைத்திருவிழாவும் சிறப்பாக நடைபெற்றது.மறுநாள் 8ஆம் நாள் திருவிழா சப்பறத்தில் கதிர்வேலர் உள்வீதி வலம் வந்து காட்சி தந்தார்.
9ஆம் நாள் திருவிழாவான தேர்த்திருவிழா 29.05.2021 சனிக்கிழமையன்று காலை 10 மணியளவில் கதிர்வேலர் சித்திரத்தேரில் வெளிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்காட்சி வழங்கினார்.
பக்தர்கள் காவடி எடுத்தும், கற்பூரச்சட்டி ஏந்தியும், பிரதட்டை செய்தும், அடி அழித்தும்,பாற்செம்பு ஏந்தியும் தங்கள் நேர்த்திகளை பூர்த்தி செய்து கொண்டனர்.
சுவிஸிலுள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த பக்தர்கள் கதிர்வேலரின் அருட்காட்சியைப்பார்த்து பிரார்த்தித்து மகிழ்ந்தனர். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் வெளிவீதியில் அமைக்கப்பட்டிருந்த தீர்த்தக்கேணியில் கதிர்வேலர் தீர்த்தமாடி பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கினார்.
பின்னர் ஆலய யாகசாலையில் மஹாபூரணாதி இடம்பெற்று யாககும்பம் வீதிவலம் எடுத்துவரப்பட்டு கதிர்வேலருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை கொடியிறக்கம் ஊஞ்சல் என்பன சிறப்பாக இடம்பெற்றன.
மறுநாள் திங்கட்கிழமை திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக இடம்பெற்று மகோற்சவம் இனிதே நிறைவுற்றது. உற்சவ காலங்களில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பக்தர்கள் பங்குபற்றியமையை காணக்கூடியதாக இருந்தது.
ஆலய உற்சவங்களில் கதிர்வேலருக்கு பல்வேறுவிதமான அலங்காரம் செய்து அழகுருவாக கதிர்வேலர் வலம் வந்ததை அவதானிக்க முடிந்தது.வேத ஆகம கிரியா பூரணம் கிரியா குமரேசர் அலங்காரச் செம்மல் ஐயப்ப குருசாமி, பால.ஜெகநாத பாகாந்தக்குருக்கள் (முரளி ஐயா), கைவண்ணத்தில் கதிர்வேலர் பல்வேறு கோலங்களில் காட்சி தந்தமை சிறப்பம்சமாக அமைந்திருந்தது.
ஆலயபிரதமகுரு சிவாகமரத்தின சிவஸ்ரீ முத்துமீனாட்சிசுந்தரம் முத்துசாமி சிவாச்சாரியார் தலைமையில் கைலை வேதாகமசீலர் இ.சிவசண்முகநாதக் குருக்கள், வேத ஆகம கிரியா பூரணம் கிரியா குமரேசர் அலங்காரச் செம்மல் ஐயப்ப குருசாமி பால.ஜெகநாத பாகாந்தக்குருக்கள் (முரளி ஐயா), மாவை ஆதீனத்தைச் சேர்ந்த ஜெகதீஸ்வர சர்மா, சூரிச்சைச் சேர்ந்த தியாக புஸ்பானந்த சர்மா (சந்திரன் ஐயா),சிவஸ்ரீ இராம சந்திரகாந்தக்குருக்கள் ( ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதமகுரு ஆகியோர் சிறப்பாக உற்சவங்களை நடத்தினர்.
சுவிஸ் பிரபல வித்துவான் ஆ.இந்திரன் தலைமையில் வு.சிவகுமார் (நாதஸ்வரம்), ளு.அருணகிரி (நாதஸ்வரம்), P.காந்தன் (தவில்)இ சு.இளமாறன் (தவில்) ஆகியோர் சிறப்பாக மங்கள இசையை வழங்கினர்.
ஆலயபரிபாலனசபைத்தலைவர் வே.கணேசகுமார் தலைமையில் நிர்வாக உறுப்பினர்கள் உற்சவம் சிறப்பாக இடம்பெற தொண்டாற்றினார்கள். மகோற்சவத்தில் தேர் திருவிழாவின் போது சுவிஸில் குனைநசளை ஆல்ப்ஸ் மலையில் அமைந்துள்ள சோமாஸ்கந்த ஆச்சிரமத்தைச் சேர்ந்த நாற்றலி, யோவானி ஆகியோர் பங்குபற்றியமை சுவிற்சர்லாந்தில் வாழும் இந்து - சுவிஸ் மக்களின் நல்லுறவை வெளிப்படுத்தியது.
ஆலய மகோற்சவ நிகழ்வுகளை சிவத்தமிழ்க் காவலர், சிவநெறிச் செல்வர், சைவ சித்தாந்த சிரோன்மணி, சைவசித்தாந்த ஜோதி, தமிழ்ச்சுடர் ஆறுமுகம் செந்தில்நாதன் அவர்கள் தமிழில் பக்தர்களுக்கு எடுத்து விளக்கினார்.
ஆலய மகோற்சவத்தை ஒட்டி ஈழத்துக் கவிஞர் இன்பம் அருளையா வரிகளில் சானு இசையில் 'கதிர்வேலாயுதா' என்னும் பாடலும், அத்துடன் சிரவை ஆதீன மாணவிகள் கமலினி கணேசன் ஹேமப்பிரியா ரவீந்திரன் பாடிய 'வேலன் வாராண்டி கதிர்வேலன் தேரில் வாராண்டி' பாடலும் வெளியிட்டு வைக்கப்பட்டன.
சுவிஸில் சுகாதார நடைமுறைகள் இறுக்கமாக இருந்தபோதும் எந்தவித இடையூறுகளும் இன்றி ஆலய உற்சவம் சிறப்பாக இனிதே நடைபெற்று முடிவடைந்துள்ளது.