ஒருமித்து குரல்கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள தமிழ் தேசிய கட்சிகள்: அரியநேத்திரன் ஆதங்கம்
தமிழ் தேசிய கட்சிகள் ஒருமித்து குரல்கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் தந்தை செல்வாவின் 47வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.
இங்கு உரையாற்றிய அரியநேத்திரன்,
தந்தை செல்வா விட்ட அடித்தளம்
''இலங்கை அரசியல் தந்தை செல்வா விட்ட அடித்தளம்தான் இன்று வரையில் தமிழ் தேசிய அரசியலில் நாங்கள் ஒரு கூர்மைபெற்றவர்களாக இருக்கின்றோம்.
தந்தை செல்வா என்னும் மகான் பிறக்காமலிருந்திருந்தால் அல்லது அவர் பிறந்து தமிழரசுக்கட்சியை வடமாகாணத்துடன் மட்டுப்படுத்தியிருந்தால் இன்று மட்டக்களப்பில் நாங்கள் பேரினவாத கட்சிகளுக்கு இறையாகியிருப்போம்.
தந்தை செல்வாவினால் செ.இராசதுரை மற்றும் சீ.மு.இராசமாணிக்கம் ஆகியோரை இனங்கண்டு தமிழரசுக்கட்சிக்கு கொண்டுவந்ததன் காரணமாகவே இந்த மாவட்டம் இன்று தமிழ் தேசிய பரப்பில் விரிந்துள்ளது.
இலங்கை தமிழரசுக்கட்சி
இலங்கை தமிழரசுக்கட்சி ஏழு தசாப்தமாக தமிழ் மக்களை ஏமாற்றிவருவதாகவும் எதுவும் செய்யவில்லையென சிலர் தெரிவித்துவருகின்றனர்.
இவ்வாறு கூறுகின்றவர்கள் அனைவரும் ஏதோவொரு வகையில் இலங்கை தமிழரசுக்கட்சி ஊடாக அரசியலுக்குள் வந்தவர்கள்தான்.
இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிழக்கினை மீட்கப்போகின்றோம் என்று பேரினவாத கட்சிகளுடன் உள்ள பிள்ளையானாக இருக்கலாம்,வியாழேந்திரனாக இருக்கலாம் அல்லது தமிழரசுக்கட்சி,தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களாகயிருக்கலாம்.
இலங்கை தமிழரசுக்கட்சி என்ற நாமம் இல்லாவிட்டால் அவர்கள் இன்று அரசியல் முகவரியற்றவர்களாக இருந்திருப்பார்கள்." என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |