யானை தாக்குதலுக்கு இலக்காகி நான்கு பிள்ளைகளின் தந்தை மரணம்
திருகோணமலை சேருவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் யானையின் தாக்குதலினால் நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் நேற்று காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சேருவில - தங்கநகர் பகுதியிலுள்ள குளத்திக்கு மீன் பிடிப்பதற்காக சென்று வீடு திரும்பும் போது யானை தாக்கியதாகவும் இதனால் 4 பிள்ளைகளின் தந்தையான அதே பகுதியைச் சேர்ந்த குணசேகரம் ராசநாயகம் (49வயது) உயிரிழந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
யானையின் தாக்குதலினால் உயிரிழந்த குறித்த சடலத்தை மூதூர் நீதவான் எச்.எம்.தஸ்லீம் பௌஸான் பார்வையிட்டதுடன் குறித்து பகுதிக்குள் கிராம மக்கள் சென்று சடலத்தை பார்வையிட்டு தடயங்களை சேதப்படுத்தியுள்ளதாகவும் இதனை அடுத்து குறித்த சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுமாறும் பொலிசாருக்கு கட்டளை இட்டார்.
குறித்த சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் இன்று பிரேத பரிசோதனை இடம்பெற உள்ளதாகவும் விசாரணைகளை
மேற்கொண்டு வருவதாகவும் சேருவில பொலிசார் தெரிவித்தனர்.
