கையில் சிக்கிய மகளை இறுகப் பிடித்துக் கொண்டேன் : கொத்தட்டுவ விபத்தில் சிக்கிய தந்தை வெளியிட்ட தகவல்(Video)
வீழ்ந்தவுடன் தடுமாறி கையை நீட்டும் போது மகள் கையில் சிக்கினாள். கையில் சிக்கிய மகளை நான் இறுகப் பிடித்துக் கொண்டேன் என கொழும்பு - கொத்தடுவ IHD நீர்வழங்கல் சபைக்கு அருகாமையில் ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கிய தந்தை தெரிவித்துள்ளார்.
கொத்தட்டுவ - கொஸ்வத்த வீதியில் கொத்தட்டுவ நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு அருகாமையில் நீர் வழங்கல் குழாய் ஒன்று உடைப்பெடுத்ததால் நேற்று(19.09.2023) காலை இந்த அனர்த்தம் ஏற்பட்டிருந்தது.
பாதுகாப்பாக மீட்பு
விபத்து இடம்பெறும் காட்சி அந்த பகுதியில் உள்ள பாதுகாப்பு கமராவில் பதிவாகியுள்ளது.
அந்த வீதியூடாக பயணித்த தந்தையும் மகளுமே இந்த துரதிஷ்டவசமான சம்பவத்திற்கு முகம்கொடுத்தனர். மகளை பாடசாலைக்கு அழைத்துச் செல்லும் சந்தர்ப்பத்திலேயே அவர்கள் இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கினர்.
இவர்கள், சுமார் 16 அடி ஆழமுள்ள குழியில் விழுந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் அருகில் இருந்தவர்களால் விபத்தில் சிக்கிய தந்தையும் மகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் விபத்தில் சிக்கிய தந்தை குறிப்பிடுகையில்,
“மகளை பாடசாலையில் கொண்டு சென்று விடுவதற்காக நான் இந்த வீதியூடாகவே செல்வேன். ஒவ்வொரு நாளும் இந்த வீதியில் நீர் நிரம்பியே இருக்கும். நாம் சாதாரணமாக எந்த நாளும் செல்வோம்.
இரு புறமும் வீதி மூடப்பட்டிருக்கவில்லை. விபத்தின் பின்னர் ஊர் மக்கள் வந்தே வீதியை மூடினர். இதற்கு முன்னர் லொறியொன்றும் இந்த வீதியூடாக பயணித்ததாக தெரிவித்தனர்.
விழுந்தவுடன் தடுமாறி கையை நீட்டும் போது மகள் கையில் சிக்கினாள். அதன் பின்பு நான் ஒரு ஓரத்தைப் பிடித்துக் கொண்டேன். பின்னர் யாரோ தெரியாது வந்து தூக்கி எடுத்தார்கள். நீரின் வேகம் கீழே இழுக்கின்றது” என குறிப்பிட்டார்.
அதிகாலை வேளையில் அந்த பாதையூடாக பயணித்த வாகன சாரதிகளும் கடும் சிரமங்களை எதிர்நோக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |