பொலிஸாரிடம் இருந்து தப்பிக்க மூன்று வயது குழந்தையை பணயக்கைதியாக்கிய தந்தை
பொலிஸாரிடம் இருந்து தப்பிக்க தனது மூன்று வயது குழந்தையை பணயக்கைதியாக வைத்து குழந்தையை கொடூரமாக தாக்கிய தந்தையொருவர் பெரும் பிரயத்தனத்துடன் கைது செய்யப்பட்டுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் - மதுரங்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மதுரங்குளி பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவர் தாக்கப்படுவதாக மதுரங்குளி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சென்று சந்தேக நபரை கைது செய்ய முயற்சித்த போது, அவரின் உறவினர்கள் சிலர் பொலிஸாருக்கு இடையூறு விளைவித்து சந்தேகநபரை தப்பிச் செல்ல சந்தர்ப்பம் வழங்கியுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரின் உறவினர்கள்
எனினும், அந்த இடத்தில் ஏற்பட்ட கடும் குழப்பநிலை காரணமாக இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் அவ்விடத்தை விட்டு வெளியேறி பொலிஸ் நிலையத்திற்குச் சென்றுள்ளனர்.
இதன் பின்னர் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் சந்தேகநபரின் தந்தை மற்றும் உறவினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கமைய பொலிஸ் குழுவொன்று சந்தேக நபரை மீண்டும் கைது செய்யச் சென்றதுடன், அவர்களை பார்த்த சந்தேகநபர் தனது மூன்று வயது குழந்தையைப் பணயக் கைதியாகப் பிடித்துக் வைத்து, கைது செய்யப்பட்டுள்ள தந்தை உட்பட மூன்று உறவினர்களையும் விடுவிக்குமாறு பொலிஸாரை அச்சுறுத்தியுள்ளார்.
அவ்வாறு செய்யாவிட்டால், குழந்தையை கொன்று விடுவோம் என மிரட்டியுள்ளார். அதேநேரம், குழந்தையைப் பாதுகாப்பதற்காக பொலிஸார் கையில் வைத்திருந்த அனைத்து ஆயுதங்களையும் வீசியுள்ளனர்.
பொலிஸாரின் நடவடிக்கை
எனினும் சந்தேக நபர் யாரும் நெருங்க முடியாதபடி தனது கையில் இருந்த கூரிய ஆயுதத்தை கொண்டு அச்சுருத்தியுள்ளார்.
இந்நிலையில் சந்தேகநபரின் உறவினர் ஒருவர் விரைந்து விரைந்து சென்று அவரை கவிழ்க்க, பொலிஸார் உடனடியாக செயற்பட்டு சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான மூன்று வயது குழந்தையை உடனடியாக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.