நானுஓயா - ரதல்ல குறுக்கு வீதியில் விபத்து: வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்
நானுஓயா - ரதல்ல குறுக்கு வீதியில் பயணித்த லொறி ஒன்று, இயந்திரக் கோளாறு காரணமாக சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (05) பிற்பகல் இடம்பெற்ற இவ்விபத்தில், லொறியின் சாரதி சிறு காயங்களுடன் மயிரிழையில் உயிர் தப்பியதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாரதிகளுக்கு அறிவுறுத்தல்
சமீப காலமாக இவ்வீதியில் வாகன விபத்துக்கள் அடிக்கடி இடம்பெற்று வருகின்றன. செங்குத்தான இவ்வீதியில் அதிக சுமைகளுடனும், வேகத்துடனும் பயணிப்பதாலும், சாரதிகளின் கவனயீனத்தினாலுமே பெரும்பாலான விபத்துக்கள் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

3.2 கிலோமீட்டர் தூரம் கொண்ட நானுஓயா - ரதல்ல குறுக்கு வீதியானது, செங்குத்தான சரிவுகளையும் பாரிய வளைவுகளையும் கொண்டுள்ளது.
இதனால், வாகனங்களை அவதானமாகச் செலுத்துமாறு அறிவுறுத்தும் அறிவிப்புப் பலகைகள் வீதியின் இருபுறமும் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து விதிகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தல்
இவ்வீதியின் ஊடாக கனரக வாகனங்கள் செல்வதற்கு முழுமையாக தடை விதிக்கபட்டும் தற்போது தொடர்ந்து இருபுறங்களிலும் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்ட நிலையிலும் கனரக வாகனங்கள் இரவு மற்றும் பகல் நேரங்களில் அத்துமீறி செல்லும் நிலை தொடர்ந்து இருக்கிறது.

எனவே, எதிர்காலத்தில் இவ்வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள் மிகவும் அவதானத்துடனும், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றியும் பயணிக்குமாறு நானுஓயா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.