நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு விவசாயிகள் கைகொடுக்க வேண்டும்! வடக்கு ஆளுநர் கோரிக்கை
விவசாயிகளாகிய உங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக நாம் விவசாய உள்ளீடுகளையும் உபகரணங்களையும் வழங்குகின்றோம். அதற்குப் பதிலாக, எமது மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான பங்களிப்பை உயர்த்துவதற்கு நீங்களும் உதவ வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடக்கு மாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ், வவுனியா மாவட்ட விவசாயிகளுக்கு விவசாய உள்ளீடுகள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்கும் நிகழ்வு வவுனியா மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
வருமானத்தை அதிகரிக்கும் வழிமுறைகள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
விவசாய உற்பத்தியை அதிகரிப்பதுடன் விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்துவதும் மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துவதும் அவசியம். வடக்கு மாகாணத்தின் பொருளாதாரத்தின் முக்கிய அச்சாணிகளாக விவசாயமும் கடற்றொழிலும் விளங்குகின்றது.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து, மாகாண சபை மற்றும் மத்திய அரசாங்கத்தின் ஊடாக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
விவசாய உற்பத்தியை அதிகரிப்பதே இத்தகைய உதவிகளின் முக்கிய நோக்கமாகும். உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் போது இறக்குமதியைக் குறைத்து நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு வலுசேர்க்க முடியும். அதில் விவசாயிகளுக்கு முக்கிய பங்கு உண்டு.
விவசாயிகளின் பெரும்பாலான பிரச்சினைகள்
நெற்செய்கைக்கு அப்பால், ஏனைய பயிர்ச்செய்கைகளிலும் ஈடுபடுவதன் மூலம் விவசாயிகள் அதிக வருமானத்தைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. உற்பத்திச் செலவைக் குறைத்து, நவீன விவசாய முறைகளைப் பயன்படுத்திப் பயிர்ச் செய்கையை முன்னெடுப்பதற்கு ஏற்ற உபகரணங்களும் வழங்கப்படுகின்றன.
இவற்றைச் சிறப்பாகப் பயன்படுத்தி விவசாயிகள் தமது வாழ்வாதாரத்தை உயர்த்துவதுடன், மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் அதிக பங்களிப்பை வழங்க வேண்டும். சில காலங்களில் விவசாயப் பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கும் போது சந்தையில் அவற்றின் விலைகள் வீழ்ச்சியடையும் நிலை ஏற்படுகின்றது.

இதனைக் கருத்தில்கொண்டு, விவசாயிகள் எந்தக் காலப்பகுதியில் எந்தப் பயிர்களைச் செய்கின்றனர், எவ்வளவு உற்பத்தி கிடைக்கும் என்பன தொடர்பான தகவல்களை அரசாங்கம் திரட்டுகின்றது. அறுவடைக் காலங்களில் உள்ளூர் உற்பத்திகளுக்குச் சந்தை வாய்ப்புகளைப் பாதுகாக்கும் நோக்கில், தொடர்புடைய விவசாயப் பொருட்களின் இறக்குமதிக்கான வரிகளை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது.
விவசாயிகளின் பெரும்பாலான பிரச்சினைகள் தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் படிப்படியாகத் தீர்க்கப்படும் என நம்புகின்றேன். வடக்கு மாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ், வவுனியா மாவட்டத்திலுள்ள 2,500 விவசாயக் குடும்பங்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக மொத்தம் 121 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், தற்போது 250 விவசாயிகளுக்கு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், பிரதியமைச்சருமான உபாலி சமரசிங்க, வவுனியா மாவட்டச் செயலர் பீ. ஏ. சயத்சந்திர, வடக்கு மாகாண மேலதிக விவசாயப் பணிப்பாளர், மாவட்டப் பிரதி விவசாயப் பணிப்பாளர் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பிரித்தானியாவில் 2 கோடி குடும்பங்களுக்கு £100 ஆற்றல் மானியம்: சான்சலர் ஜான் ஹீலி அறிவிப்பு News Lankasri
வழி மாற்றிவிடப்பட்ட விமானம்., லண்டனில் சிக்கித் தவித்த இந்திய பெண் - ரூ.1.6 லட்சம் இழப்பீடு News Lankasri
68 பேர் கொல்லப்பட்ட மிக மோசமான ரயில் விபத்து: மூன்று நாட்கள் துக்கமனுசரிக்கும் ஸ்பெயின் News Lankasri