விவசாயிகள் விலையினை தீர்மானிப்பவர்களாக மாற வேண்டும் - வடமாகாண ஆளுனர்
விவசாயிகள் விலையினை தீர்மானிப்பவர்களாக மாறவேண்டும் என்று வடமாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.
ஒட்டுசுட்டான், கூழாமுறிப்பு பகுதியில் தானிய களஞ்சிய அடிக்கல் நாட்டும் நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு களஞ்சியசாலையும் ,மன்னார் மாவட்டத்தில் ஒரு களஞ்சியசாலையும் அமைப்பதற்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.
ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பில் அமையவுள்ள 1000 மெற்றிக்தொன் கொள்ளளவு கொண்ட களஞ்சிய சாலையும், 6 மெற்றிக்தொன் நெல்லினை உலரவிடுவதற்கான தளமும் அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் விவசாய அமைச்சின் செயலாளர் வடக்கு மாகாணத்தில் ஒவ்வொன்றும் 100 மெற்றிக்தொன் கொள்ளளவு கொண்ட 10 களஞ்சிய சாலைகள் அமைத்து தருவதற்கான நிதியினை வடக்கிற்கு ஒதுக்குவதாக உறுதி அளித்துள்ளார்.
இதனை விட பல்வேறு இடங்களில் 27 ற்கும் மேற்பட்ட களஞ்சியசாலைகள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன.
களஞ்சியசாலைகள் அமைத்து தருவதன் நோக்கம் என்னவென்றால் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை உற்பத்தியின் பின்னர் சரியாக பதப்படுத்தி அதற்கு ஏற்றவகையில் பெறுமதி சேர்க்கப்பட்டு சரியான விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என்பது தான் எங்கள் எதிர்பார்ப்பு.
குறைந்த விலைக்கு வியாபாரிகளுக்கு உடனடியாக விற்பனை செய்யாமல் சேமித்து வைக்கப்பட்டு உரிய நேரத்தில் விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காகத் தான் இவ்வாறான களஞ்சியசாலை அமைத்து வருகின்றோம்.
ஆனால் விவசாயிகள் வயலில் வைத்து பொருட்களுக்கு விலைகளை பேசி வியாபாரிகளுக்கு கையளிப்பீர்களானால் அமைக்கப்படும் களஞ்சியசாலைகள் எல்லாம் வெற்று களஞ்சியசாலைகளாகத் தான் இருக்கும் அந்த வகையில் விவசாயிகளின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும்.
நான் பயணிக்கும் போது வீதிகளில் நெல் காயவிடப்பட்டுக்கொண்டு இருக்கின்றீர்கள். விவசாய பெருமக்களாகிய நீங்கள் உங்கள் பொருட்களின் விலையினை நீங்கள் தீர்மானிப்பவர்களாக மாறவேண்டும்.
தற்போது வெளிநாட்டில் இறக்குமதி பொருட்கள் நிறுத்தப்பட்டு உள்ளுர் உற்பத்தி ஊக்குவிக்கப்படுகின்றது. அதனால் தான் உள்ளுர் விவசாய பொருட்களுக்கு தரமான விலை கிடைக்கின்றது.
வடமாகாண சபையில் இருந்து 20 மில்லியன் ரூபாய்களை வட்டி அறவிடப்படாத தொகையாக பலநோக்கு கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கியுள்ளோம். விவசாயிகள் முழுமையான பயனினை பெற்றுக்கொள்ள வேண்டும்.
விவசாயிகளின் பொருட்கள் மற்றவர்களால் வஞ்சிக்கப்பட்டு ஏமாற்றப்படக்கூடாது என்பதற்காக இவற்றை நாங்கள் செய்துகொண்டிருக்கின்றோம். அதற்கேற்ற வகையில் விவசாயிகள் உணர்ந்து செயற்பட வேண்டும் என வடமாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.






யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

இந்தியாவில் Audi A9 காரை வைத்துள்ள ஒரே பெண்! நீதா அம்பானியின் விலையுர்ந்த கார் கலெக்ஷன் இதோ News Lankasri
