வயல் காணிகளை மீட்டுத் தருமாறு விவசாயிகள் அவசர கோரிக்கை!
திருகோணமலை - மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ரொட்டவெவ புளியங்குளம் வயல் காணிகளை தமக்கு மீண்டும் மீட்டுத் தருமாறு அந்தப் பகுதி விவசாயிகள் அரசாங்கத்திடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமது வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி, கவலை கலந்த விசனம் வெளியிட்டுள்ளனர்.
90களின் யுத்த இடப்பெயர்வு
இது குறித்துப் பாதிக்கப்பட்ட விவசாய சங்கத்தினர் கருத்துத் தெரிவிக்கையில், எமது மூதாதையர்கள் கடந்த 1977ஆம் ஆண்டு தொடக்கம் 1990ஆம் ஆண்டு வரை இந்தப் புளியங்குளம் வயல் காணிகளில் மிகச் செழிப்பான முறையில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.
எனினும், 1990ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக, நாம் எமது சொந்த வீடுகளையும், விளைநிலங்களையும் கைவிட்டு, உயிராபத்துக்களுக்கு மத்தியில் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் தஞ்சம் புக வேண்டியேற்பட்டது என குறிப்பிட்டுள்ளனர்.

நீண்ட காலத்திற்குப் பின்னரே தாம் மீண்டும் தமது சொந்தக் கிராமங்களுக்குத் திரும்பியதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில், 'மகநெகும' மற்றும் 'கமநெகும' ஆகிய திட்டங்களின் கீழ் இந்தப் பகுதியிலுள்ள சின்ன புளியங்குளம் மற்றும் பெரிய புளியங்குளம் ஆகிய இரண்டு குளங்களும் பல இலட்சம் ரூபாய் செலவில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளன.
குளங்கள் புனரமைக்கப்பட்ட போதிலும், அதன்கீழ் உள்ள விவசாய நிலங்களைப் பயன்படுத்துவதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என விவசாயிகள் சாடுகின்றனர்.
விவசாயக் காணிகள்
தமது கிராமத்தை சூழவுள்ள குபுக்வெவ - கெமராவ மற்றும் மெதவெவ போன்ற பகுதிகளில் ஏனைய விவசாயிகள் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கு அரச அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.
ஆனால், பாரம்பரியமாக தமக்குச் சொந்தமான புளியங்குளம் பகுதியிலுள்ள விவசாயக் காணிகள் மட்டும் இன்னும் விடுவிக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எமது பாரம்பரியக் காணிகளை விவசாய நடவடிக்கைகளுக்காக மீண்டும் விடுவித்துத் தருமாறு பல அரசியல்வாதிகளிடமும், உயர் அரச அதிகாரிகளிடமும் நாம் நேரில் சென்று பலமுறை கோரிக்கை விடுத்தோம்.ஆனால், இன்றுவரை எமது நியாயமான கோரிக்கைக்கு எவ்விதமான தீர்வும் கிடைக்கவில்லை.
வெறும் வாக்குறுதிகள் மட்டுமே மிஞ்சியுள்ளன என விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
எனவே, தற்போதைய அரசாங்கமாவது தலையிட்டு, பல வருடங்களாக முடங்கிக் கிடக்கும் ரொட்டவெவ புளியங்குளம் வயல் காணிகளை உடனடியாக மீட்டெடுத்து, தமது விவசாய நடவடிக்கைகளைத் தொடர வழிவகை செய்ய வேண்டும் என அந்தப் பகுதி தமிழ், முஸ்லிம் விவசாயிகள் ஒன்றிணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.