மட்டக்களப்பில் மண் அகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கவனஈர்ப்பு போராட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நவகிரி ஆற்றுப்பகுதியில் மண் அகழப்படுவதன் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும், குறித்த பகுதியில் மண் அகழ்வினை நிறுத்தக்கோரியும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணங்கள் கோரியும் குறித்த பகுதி விவசாயிகள் நேற்று கவனஈர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
தமது பகுதிகளில் முன்னெடுக்கப்படும் மண் அகழ்வுகளைத் தடுத்து நிறுத்தி வயல் பகுதிகளைப் பாதிக்கும் வகையிலான நவகிரி ஆற்றுப்பகுதியைப் புனரமைக்க நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் விவசாயிகள் தெரிவிக்கையில்,
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கண்ணபுரம் பகுதியில் உள்ள அலியார்வட்டை, காலார் வெட்டை, கன்டம் நாயாற்றுவட்டை ஆகிய பகுதிகள் நவகிரி ஆற்றின் ஒரு பகுதி உடைப்பெடுத்ததினால் அழிவடைந்துள்ளது.
நவகிரி ஆற்றின் நாயாற்றுவட்டை பகுதியில் மேற்கொள்ளப்படும் மண் அகழ்வுகள் காரணமாக ஆற்றின் கட்டுகள் உடைப்பெடுப்பதனால் இந்த அழிவுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
குறித்த பகுதியில் சிலரால் சட்ட விரோதமான முறையில் மேற்கொள்ளப்படும் மண் அகழ்வுகளே இந்த நிலைமைக்குக் காரணம். கண்டத்தில் சட்டவிரோத மண் அகழ்வால் 1267 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது.
அறுவடைக்குத் தயாரான நிலையிலிருந்த விவசாய நிலங்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது. கடன்பெற்றும் நகைகளை அடகு வைத்தும் செய்கை பண்ணப்பட்ட விவசாய நிலங்கள் நீரில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில் மிகவும் கஷ்டத்தினை எதிர்நோக்கியுள்ளதாகவும் தமக்கான நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
நவகிரி ஆற்றுப்பகுதியில் நடைபெறும் அனைத்து விதமான மண் அகழ்வுகளும் நிறுத்தப்பட்டு அப்பகுதியில் உள்ள வயல் நிலங்களைப் பாதுகாக்கும் வகையில் கொங்கிறீட் கட்டுகளை அமைக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.










பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri