அமைச்சர் மனுஷவின் தலையீட்டினால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம்
வெலிஓயா - ஹாலெம்ப ஏரி விவசாயிகள் அமைப்பின் தலைவர் நான்கு நாட்களாக மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டம் நேற்று முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின்(Manusha Nanayakkara) தலையீட்டில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சரை சந்தித்து கலந்துரையாடிய விவசாயிகள்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற ஜெயகமு ஸ்ரீலங்கா மக்கள் நடமாடும் சேவையில் கலந்து கொண்ட அமைச்சர் மனுஷ நாணயக்காரவை ஹாலெம்ப விவசாயிகள் சந்தித்து தமது தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.
அதன்படி நேற்றிரவு அவ்விடத்திற்கு சென்ற அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் வனஜீவராசிகள், வன பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஆகியோர் தொலைபேசியில் கலந்துரையாடினர்.
ஹலபா ஏரி விவசாயக் காலனிக்கு நீர்ப்பாசனம் செய்வதற்கு தேவையான 225 மில்லியன் ரூபா நிதி அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் என்றும் அந்த கலந்துரையாடலின் போது உறுதியளிக்கப்பட்டது.
அமைச்சர் மனுஷ நாணயக்கார இது தொடர்பில் விவசாயிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு அறிவித்ததையடுத்து அவர்கள் தமது போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர இணங்கியுள்ளனர்.
இதன்படி உண்ணாவிரதத்தை கைவிட்ட விவசாயிகள் அமைப்பின் தலைவர், தனது பிரச்சினை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அமைச்சரிடம் கையளித்ததுடன், அவைகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும் கோரிக்கை விடுத்தார். இதற்கான நிதியை விரைவில் ஒதுக்குவது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |