மட்டு. வாகனேரியில் யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு! ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய மக்கள்
மட்டக்களப்பு - வாகனேரி பிரதேசத்தில் காட்டு யானை தாக்குதலில் 60 வயது விவசாயி உயிரிழந்ததை அடுத்து இன்றைய தினம் (21.09.2026) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது 'இனியும் உயிர் பலிகள் ஏற்படுவதற்கு முன் யானை - மனித மோதலை தடுக்க உரிய தீர்வை பெற்றுத்தர வேண்டும்' என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பரிதாபமாக உயிரிழப்பு
வாகனேரி பிரதேசத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 60 வயதுடைய ஞானமுத்து மனோகரன் என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தார்.

குறித்த நபர் சம்பவ தினமான இன்று காலையில் வீட்டில் இருந்து வயல் வேலைக்கு சென்றிருந்த போதே காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மற்றும் மரண விசாரணை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைத்துள்ளனர்.

உரிய நடவடிக்கை
இதனிடையே போராட்டத்தில் இறங்கிய மக்கள் தெரிவிக்கையில், தொடர்ச்சியாக இப்பிரதேசத்தில் காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருவதாகவும், இது தொடர்பாக வனவிலங்கு அதிகாரிகளுக்கு பலமுறை முறைப்பாடு செய்தும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காமல் அசமந்த போக்குடன் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டி பிரதேச மக்கள் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் ஒன்று கூடி இன்னொரு உயிரை இழக்க நாங்கள் தயாரில்லை எனவே உடன் தீர்வை பெற்றுத் தரவும் என குறிப்பிட்டுள்ளனர்.


அனோஜன் விவகாரம் தொடர்பில் அவரது சட்டத்தரணி கூறியுள்ள விடயம்! எழுத்துமூல தீர்ப்பு குறித்து வெளியிடப்பட்ட தகவல்