வயலில் பரவிய தீயைக் கட்டுப்படுத்த முயன்ற விவசாயி உயிரிழப்பு
அம்பாந்தோட்டை, வீரவில - கங்கசிறிகம பகுதியில் தனது வயலில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த முயன்ற 63 வயதுடைய விவசாயி ஒருவர், தீக்காயங்களுக்கு உள்ளாகிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து வீரவில பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொலிஸார் மேலதிக விசாரணை
உயிரிழந்தவர் திஸ்ஸமஹாராம, கங்கசிறிகம பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணைகளின்படி, மேற்படி நபர் தனது வயலில் இருந்த வைக்கோலுக்குத் தீ வைத்துள்ளார்.

எனினும், அந்தத் தீ எதிர்பாராத விதமாக அருகில் இருந்த ஏனைய வயல் பகுதிகளுக்கும் வேகமாகப் பரவியுள்ளது. பரவிச் சென்ற தீயைக் கட்டுப்படுத்த அவர் தீவிரமாக முயன்றபோது, துரதிர்ஷ்டவசமாகத் தீயினுள் சிக்கியுள்ளார்.
இதில் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் தற்போது உடற்கூற்றுப் பரிசோதனைக்காகத் திஸ்ஸமஹாராம வைத்தியசாலையின் மார்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் வீரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.