நோயால் அவதிப்பட்ட தந்தை! இலங்கை மாணவனின் அசத்தலான கண்டுபிடிப்பு - குவியும் பாராட்டுக்கள்
தந்தை டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்ட போது தனக்குள் ஏற்பட்ட யோசனைக்கு அமைய களுத்துறை மாவட்ட பண்டாரகமை கொத்தலாவல பிரதேசத்தை சேர்ந்த மாணவன் அருமையான கருவியை வடிவமைத்துள்ளார்.
ஓஷான் ரஷ்மித விக்ரமசூரிய என்ற இந்த மாணவன் பண்டாரகமை தேசிய பாடசாலையில் 10 ஆம் ஆண்டில் கல்வி கற்று வருகிறார். இந்த மாணவன் மழையின் போது நீரை வெளியேற்றும் மின்சார தானியங்கி நீரோடும் தடத்தை உருவாக்கியுள்ளார்.
இந்த கருவியை நேரடி மின்சாரத்திலும் மின் கலத்தின் மூலம் இயங்க வைக்க முடியும். மழை பெய்து ஓய்ந்த பின்னர், இந்த கருவி தானாக இயங்கி, நீரோடும் தடத்தில் தங்கியுள்ள தண்ணீர் மற்றும் குப்பைகளை வெளியேற்றுவதுடன் 24 மணி நேரத்திற்கு ஒரு முறை சுயமாக இயங்கி அதில் உள்ளவற்றை வெளியேற்றும்.
ஈரத்தன்மையை தாங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. தனது வடிவமைப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ள மாணவன்,
எனது தந்தை காரணமாக இவ்வாறான கருவியை வடிவமைக்க நினைத்தேன். எனது தந்தை டெங்கு நோயில் கஷ்டப்பட்டவர். மழை நீரோடும் தடங்களை சரியாக சுத்தம் செய்வதில்லை என்பதாலேயே டெங்கு நோய் பரவல் அதிகரிக்கின்றது.
அதனை சுத்தப்படுத்த பலருக்கு சந்தர்ப்பம் கிடைப்பதில்லை என்பது டெங்கு நோய் பரவலுக்கு காரணம். இதன் காரணமாக இந்த கருவியை வடிவமைத்தேன் எனக் கூறியுள்ளார்.
இதேவேளை, இந்த மாணவனின் திறமையையும் கண்டுப்பிடிப்பையும் பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.



