யாழில் தந்தையைக் கொன்ற பிள்ளைகள்: இரு மகன்கள் உட்பட மூவர் கைது (Photos)
யாழ். மிருசுவில் - கரம்பகம் பகுதியில் தோட்டக் குடிசையில் தங்கியிருந்த குடும்பஸ்தர் ஒருவர் கழுத்து வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொலை செய்யப்பட்டவரது இரு மகன்களும் அவர்களுக்கு உதவிய அவர்களின் நண்பருமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணையை அடுத்து மூவரும் கைது செய்யப்பட்டதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடைய சிவசோதி சிவகுமார் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயர்தர மாணவர்கள் இருவர் கைது
தந்தை தங்களோடு மோசமாக நடந்து கொண்டதாலேயே அவரைக் கொலை செய்துள்ளதாக பொலிஸாரிடம் மகன்கள் தெரிவித்துள்ளனர்.
கைதானவர்கள் பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி பயிலும் 17 மற்றும் 19 வயதுடைய மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்திகள் இரண்டு அருகில் இருந்த குளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
தந்தை தம்மை கொடுமைப்படுத்துவதால் அவரை கொன்றதாக பிள்ளைகள் இருவரும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 19 வயதான மூத்த மகனும், அவருடன் துணையாக தங்கி நின்ற நண்பரான 19 வயதான இளைஞனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 19 வயதான இருவரும் அண்மையில் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். மூவருமே மீசாலையிலுள்ள முன்னணி பாடசாலையொன்றில் கல்வி பயின்றவர்கள்.
கொடிகாமம் பொலிஸார் 4 மணித்தியாலங்களிற்குள் இந்த கொலை மர்மத்தை துலக்கியுள்ளனர். காலையில் 5 மணியளவில் இந்த சம்பவம் பற்றிய முறைப்பாடு செய்யப்பட்டது. காலை 9 மணியளவில் கொலை மர்மத்தை துலக்கி பொலிஸார், சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.
இவர்கள் கொலை செய்ய பயன்படுத்திய கத்திகள் இரண்டை கொலை நடந்த இடத்துக்கு அருகில் உள்ள குளத்தில் இருந்து இன்று மாலை நீண்ட தேடுதலுக்குபின் இரத்த கறைகளுடன் பொலிஸார் மீட்டுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட மூவரையும் நாளைய தினம் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக
கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
கைதானவர்களை சாவகச்சேரி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த சாவகச்சேரி நீதவான் யூட்சன் மரண
விசாரணையின் பின்னர் சடலத்தை உறவினரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த இரண்டரை வருடங்களாக மனைவியை பிரிந்து தோட்டக் குடிசையிலேயே இவர் தனிமையில் வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.