யாழில் குடும்பஸ்தர் ஒருவர் மர்மமான முறையில் மரணம் (Video)
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வீடொன்றில் குடும்பஸ்தர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் யாழ். கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டரங்கு வீதிக்கு அருகில் உள்ள வீடொன்றில் இன்று (12.08.2023) இடம்பெற்றுள்ளது.
54 வயதான கணபதிப்பிள்ளை மகேந்திரன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த குடும்பஸ்தரின் மனைவி நேற்று (11.08.2023) திருமணச் சடங்கிற்கு சென்றவேளை குடும்பஸ்தர் தனிமையாக வீட்டில் இருந்த நிலையில், குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
இன்று காலை உறவினரொருவர் இவர்களது வீட்டிற்கு சென்று பார்த்தபோது குடும்பஸ்தர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதை அவதானித்துள்ளதையடுத்து, கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை, உயிரிழந்தவரின் சடலத்தில் அடிகாயங்கள் காணப்படுவதாகவும் இதனால் குறித்த குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



