மன்னாரில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட இளம் குடும்பஸ்தர் திடீரென உயிரிழப்பு
மன்னார் - எருக்கலம்பிட்டி, புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் வைத்து மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் இன்று காலை திடீர் சுகயீனம் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
உயிரிழந்தவர் மன்னார் - எருக்கலம்பிட்டி தர்கா நகர்ப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரான ரம்ஸான் (வயது 29) என தெரியவந்துள்ளது.
மன்னார், எருக்கலம்பிட்டி பகுதியைச் சேர்ந்த இருவர் நேற்று இரவு முச்சக்கரவண்டியில் புதுக்குடியிருப்பு பகுதிக்குச் சென்று மீண்டும் எருக்கலம்பிட்டி கிராமத்தை நோக்கி வந்துள்ளனர்.
இதன்போது எருக்கலம்பிட்டி - புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட மன்னார் பொலிஸார் குறித்த இருவரையும் மறித்து முச்சக்கரவண்டியைச் சோதனையிட்ட நிலையில் போதைப்பொருள் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த இருவரையும் கைது செய்து மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் அவர்களை இன்றையதினம் காலை மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில் ரம்ஸான் (வயது 29) என்ற இளம் குடும்பஸ்தருக்கு திடீரென சுகயீனம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
உடனடியாக மன்னார் பொலிஸார் குறித்த இளம் குடும்பஸ்தரை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று காலை அனுமதித்த நிலையில் குறித்த நபர் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த நபர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கப்பட்டதால் உயிரிழந்திருக்க முடியும் என உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.