தெரியாதவர்கள் கொடுத்த கேக்கை உட்கொண்ட குடும்பம் வைத்தியசாலையில்
அறிமுகமற்ற நபர்கள் கொடுத்த குளிர்பானம் மற்றும் கேக்கை உட்கொண்டஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்வபம் புத்தளம் நகரை அண்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் நகரை அண்மித்த பிரதேசமொன்றில் வசிக்கும் 65 வயதுடைய முடி திருத்துனர், மற்றும் அவரது 63 வயது மனைவி, 29 வயது மகள், முடிதிருத்துனரின் 86 வயது தந்தை மற்றும் 84 வயதான தாயார் ஆகியோர் இவ்வாறு மயக்கமுற்று, புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நீண்ட காலம் பழகியவர்கள்
புத்தளம் - அனுராதபுரம் வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள இவர்களின் வீட்டிற்கு இனந்தெரியாத அந்நியர்கள் இருவர் வருகை தந்துள்ளனர்.
அவ்வாறு வந்த சந்தேகநபர்கள் இருதய சத்திர சிகிச்சைக்கு உள்ளான இந்த வீட்டின் உரிமையாளரிடம் நீண்ட காலம் பழகியவர்கள் போன்று நட்பாக உரையாடி, குறித்த நபருக்கு நிதி நிறுவனம் ஒன்றின் மூலம் 50,000 ரூபாவை வழங்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
உரிய காசோலையை வழங்குவதற்கு முன், அந்த நபர்கள் கொண்டு வந்துள்ள குளிர்பானம் மற்றும் கேக்கை உட்கொண்டு, அதைப் படம் பிடித்து, காசோலை வழங்கத் தயாராக உள்ள நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, அவர்களின் கோரிக்கையை ஏற்று வீட்டில் இருந்தவர்கள் கேக் வெட்டி உட்கொண்டு, குளிர்பானத்தை அருந்தவும் செய்துள்ளனர்.
தங்கை விழுந்துவிட்டாள்
ஆனால், வீட்டின் உரிமையாளரான முடிதிருத்துனர் ஒரு சிறிய துண்டு கேக்கை மட்டும் சுவைத்ததாகவும், குளிர்பானத்தை அருந்தவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், இனந்தெரியாத நபர்கள் கொண்டு வந்த கேக் மற்றும் பானங்களைக் குடித்துவிட்டு, சிறிது நேரத்தில் மனைவி, மகள், தந்தை மற்றும் தாய் மயங்கி விழுந்ததைக் கண்ட வீட்டு உரிமையாளரான முடிதிருத்துனர், உடனடியாக புத்தளம் நகரில் வேலை செய்யும் மூத்த மகளுக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து "தங்கை விழுந்துவிட்டாள்" என்று கூறுவதற்கிடையில் அவரும் மயங்கி விழுந்துள்ளார்.
அவர் தன் மகளுக்கு போன் செய்ததையடுத்து பதற்றத்துடன் வீட்டுக்கு வந்த இரண்டு அந்நிய சந்தேக நபர்களும் வேகமாக வீட்டை விட்டு ஓடியதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொலிஸார் விசாரணை
தந்தையின் தொலைபேசி அழைப்புக்கு பதில் கிடைக்காததால் கவலையடைந்த மூத்த மகள் முச்சக்கர வண்டியொன்றை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு விரைந்து வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது வீட்டில் அனைவரும் மயங்கிக் கிடந்ததை அடுத்து கத்தி சத்தமிட்டு, அக்கம்பக்கத்தினரை வரவழைத்து தன் குடும்ப அங்கத்தவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல ஏற்பாடு செய்துள்ளார்.
தற்போது பாதிப்புக்குள்ளான ஐவரும் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |