பிரித்தானியாவில் கடலில் மூழ்கிய குடும்பம்: சிறுமியும் உயிரிழப்பு
பிரித்தானியாவில் அண்மையில் கடலில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவத்தில், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 6 வயது சிறுமியும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
லண்டனைச் சேர்ந்த பாலஸ்தீன வம்சாவளி குடும்பத்தினர், இங்கிலாந்தில் நிலவும் கடுமையான வெப்ப அலை காரணமாக ஷோரேஹாம் கடற்கரைக்குச் சென்றிருந்த போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் சிறுமியின் தந்தையான ஹஸன் அல்-கவாஸ் (55), தாய் ஸீனா அலய்ன் (37) மற்றும் 14 வயது சகோதரி சாரா ஆகியோர் செவ்வாய்க்கிழமை சம்பவ இடத்திலேயே நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
உயிரிழப்பு
ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 6 வயதான சாஜா அல்-கவாஸ் வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் போதிலும், இது எவ்வித வெளிநபர்களின் தலையீடும் இன்றி இடம்பெற்ற விபத்து என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், ஐரோப்பா முழுவதிலும் நிலவும் கடுமையான வெப்ப அலை காரணமாக நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.