நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; ஜன்னல் வழி துப்பாக்கிச்சூடு நடத்திய அதிகாரிகள்..! எழுப்பப்பட்டுள்ள கேள்வி
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலின் போது சிறைச்சாலை வாயிலின் சிறிய ஜன்னல் வழியே கைதிகளை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிகளுக்கு எதிராக இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு குற்றம்சாட்டியுள்ளது.
அத்துடன் குறித்த அதிகாரிகளுக்கு எதிராக இதுவரை எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன் என சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவரான சேனக பெரேரா கேள்வி எழுப்பியுள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் நேற்றைய தினம் (21) குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
உண்மையான சிக்கல்
அவர் மேலும் தெரிவிக்கையில், நீர்கொழும்பு சிறைச்சாலைச் சம்பவம் தொடர்பான வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அங்கு உயிரிழந்த கைதிகளைக் கொலை செய்தது யார் என்பது தொடர்பான உண்மையான சிக்கல் எழுந்துள்ளது. ஏனெனில், உயிரிழந்த கைதிகளில் பெரும்பாலானோர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காரணமாகவே மரணமடைந்துள்ளனர்.

எனவே, இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியது யார்? அல்லது கைதிகளே தங்களைத் தாங்களே சுட்டுக்கொண்டார்களா? அப்படியில்லை எனில், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்கள் ஏன் இதுவரை கைது செய்யப்படவில்லை? போன்ற கேள்விகளை நாங்கள் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தோம்.
சட்ட நடவடிக்கை
அத்துடன், சிறைச்சாலை வாயிலின் சிறிய ஜன்னல் வழியே கைதிகளை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்திய அந்த அதிகாரிகளுக்கு எதிராக இதுவரை எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்? அவர்கள் நாட்டின் குற்றவியல் சட்டத்துக்கு உட்பட்டவர்கள் இல்லையா? என்பதையும் நாங்கள் நீதிமன்றத்தில் முன்வைத்தோம்.
தற்போது இடம்பெற்றுவரும் இந்த விசாரணைகளில் எந்தவொரு நடுநிலைமையையும் எங்களால் காண முடியவில்லை. கைதிகளை படுகொலை செய்த நபர்களுக்கு எதிராகவும் சட்டம் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே நீதிமன்றில் நமது பிரதான கோரிக்கையாக இருந்தது என்றார்.