விழிப்புடன் இருக்கவும்! கடற்பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அம்பர் எச்சரிக்கை
இலங்கையின் பல கடற்பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலவக்கூடும் என இயற்கை பேரிடர் முன்னறிவிப்பு மையம் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சனிக்கிழமை (22) காலை 10:30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பு, ஞாயிற்றுக்கிழமை (23) காலை 10:30 மணி வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
எனவே கடற்படை மற்றும் கடற்றொழில் சமூகத்தினர் விழிப்புடன் இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடல் கொந்தளிப்பு
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக சிலாபம் வரையிலான கடல் பகுதிகளிலும், மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளிலும் மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் அவ்வப்போது கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளில் அலைகளின் உயரம் 2.0 முதல் 2.5 மீட்டர் வரை உயரக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, கடல் பகுதிகளில் பயணிக்கும் கடற்படையினரும், கடற்றொழில் சமூகத்தினரும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.