அநுர ஆட்சியில் தொடரும் போலி வாக்குறுதிகள் - ஏமாந்து விட்டார்களா தமிழ் மக்கள்..!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வடக்கு கிழக்கில் இருக்கின்ற தமிழர்களுக்கு ஏதே நல்லது செய்வதாக காட்டிக் கொண்டு தன் பக்கம் ஈர்க்கும் செயல்பாட்டை செய்து வருகின்றார்.
எனவே தமிழ் மக்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதுடன் வரப்போகும் ஒற்றையாட்சி அரசியல் அமைப்புக்கு தொடர்பான பொதுசன வாக்கெடுப்புக்கு எதிராக அனைத்து அரசியல் தலைவர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் தெரிவித்தார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மக்கள் சந்திப்பு மட்டக்களப்பு துறைநீலாவணை பிரதேசத்தில் நேற்று(23.08.2026) மாலை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
போலி வாக்குறுதிகள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பட்டிருப்பு தொகுதி என்றால் அது ஒரு தமிழ் தொகுதி. இங்கு தேசிய கட்சிகளோ அல்லது மாற்றுக் கட்சிகளோ ஆசனங்களைப் பெற முடியாது. துறைநீலாவணை, களுவாஞ்சிக்குடி, பட்டிருப்பு போன்ற பகுதிகளில் தமிழ் தேசிய உணர்வுடன், தமிழர்கள் என்ற ஒரு திமிருடன் இருக்கின்றோம்.

அந்த உணர்வையும், சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தி, எங்களுடைய வாக்குகளைச் சூறையாடி, தங்களுடைய சுயலாபங்களுக்காக அந்த வாக்குகள் பயன்படுத்தப்படுகின்றன.
தேர்தல் காலங்களில் இங்கு வந்து போராடினோம், மாவீரர்களை இழந்திருக்கிறோம் என்று கூறி எங்கள் மக்களை நம்ப வைத்து வாக்குகளைப் பெற்றுக்கொள்கின்றனர்.
பின்னர் நாடாளுமன்றம் மற்றும் பிரதேச சபைகளில் பிரதிநிதித்துவத்தைப் பெற்று அதிகாரம் கைக்கு கிடைத்ததும், அந்த மக்களின் குறைகளைக் கேட்டறிவதற்கு யாரும் வருவதில்லை.
76 வருடங்களாக தொடரும் அடக்குமுறை
இதுதான் இன்று வடக்கு, கிழக்கில் காணப்படும் ஒரு துர்ப்பாக்கியமான நிலை. தமிழர்கள் நம்பி வாக்களித்த, தமிழர்களுக்குப் பொறுப்பாக இருக்க வேண்டிய இந்த மண்ணின் தரப்புகள், தமிழர்களுடைய விவகாரங்களைக் கையாளாமல், தங்களுடைய சொந்த நலனுக்காகவும் அரசாங்கத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக்கொள்கின்றனர்.

எமது மக்களின் தியாகங்களை நிறைவேற்றுவதற்கும், அவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதற்கும் கிழக்கில் எந்தவொரு தரப்பும் இல்லை.
இந்த மண்ணில் கடந்த 76 வருடங்களாக மிகப்பெரிய இன அடக்குமுறைக்குள் வாழ்ந்து வருகின்றோம். சிங்களப் பேரினவாதம் எங்களை அடக்கி ஒடுக்கி வருகின்றது” என்றார்.



நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8 Evening