இலங்கையில் தனியார் வைத்தியசாலையில் மோசடி! விசாரணையில் சிக்கிய மூவர்
கம்பஹா, சப்புகஸ்கந்த பிரதேசத்தில் வைத்தியரின் பரிந்துரை சீட்டு இன்றி வலி நிவாரணி மருந்துகள், போதைக்கு அடிமையானவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பில், தனியார் வைத்தியசாலை ஒன்றின், மருந்தாளுநர், தாதி மற்றும் காசாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக, வலன மத்திய ஊழல் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
இந்தநிலையில், குறித்த தனியார் மருத்துவமனையில், இருந்து போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு விற்பனை செய்ய பயன்படுத்தப்படும் 53 டிராமடோல் மாத்திரைகளும், 548 பிரேகாப்லைன் மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வலி நிவாரணி
முன்னதாக, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை வலி நிவாரணி வாங்கும் முகவராக பாவித்து, குறித்த இடத்தில் பணிபுரிந்த பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்,குறித்த சட்டவிரோத விடயம் தெரியவந்துள்ளதாக கம்பஹா மாவட்ட உணவு மற்றும் மருந்து பரிசோதகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி விக்கிரமசேகர பண்டார தெரிவித்தார்.
குறித்த ஸ்தாபனம் ஓய்வு பெற்ற மருத்துவருக்கு சொந்தமானது. அத்துடன் களனி பிரிவுக்குட்பட்ட சப்புகஸ்கந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாகொல தெற்கு பகுதியில் அமைந்துள்ள இந்த தனியார் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐந்து வகையான வலிநிவாரணி மருந்துகளுடன் கூடிய 601 மருந்துகள் மீட்கப்பட்டுள்ளன.
ஏற்படும் ஆபத்து
இவ்வாறான வலிநிவாரணி மருந்துகளை நீண்டகாலமாகப் பயன்படுத்தினால் உடல் உறுப்புகளுக்குப் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என விக்கிரமசேகர குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள் மூலம் இந்த போதைப்பொருட்களை மொத்தமாக விற்பனை செய்து வருவது தெரியவந்தது.
இந்த மூன்று சந்தேக நபர்களும் கம்பஹா மாவட்ட உணவு மற்றும் மருந்துப் பரிசோதகர் பண்டாரவிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், இம்மாதம் 26ஆம் திகதி மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டு பிணையில், செல்ல அனுமதிக்கப்பட்டனர்