இறக்குமதிக்கு வழங்கப்பட்டது அனுமதி: வெளியாகியுள்ள விபரம்
மீள் ஏற்றுமதிக்காக மிளகு, இஞ்சி, மஞ்சள் உள்ளிட்ட மசாலா பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு விதிமுறைகளின் கீழ் அது தொடர்பான இறக்குமதி உரிமங்களை வழங்க அமைச்சரவை வழங்கிய தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, மிளகு, ஜாதிக்காய், ஏலக்காய், இஞ்சி, மஞ்சள் மற்றும் பிற மசாலாப் பொருட்களை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் அனுமதிக்கு உட்பட்டு இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுகிறது.
அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு உள்நாட்டில் குறைந்தபட்ச மதிப்பான 35 சதவீதத்தை சேர்த்த பிறகு, மீள் ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தடை செய்யப்பட்ட இறக்குமதி
2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், இந்த பொருட்களை இலங்கைக்கு இறக்குமதி செய்வது முற்றாக தடைசெய்யப்பட்டது.
எவ்வாறாயினும், கடந்த வருடம் டிசம்பர் மாதம் 6ஆம் திகதி முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தின்படி, தெரிவு செய்யப்பட்ட மசாலாப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் மீள் ஏற்றுமதி செய்வதற்கும் நிதியமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
முதலீட்டுச் சபையின் பரிந்துரைகளின் பேரில் அங்கீகரிக்கப்பட்ட தொழில்முனைவோர் மட்டுமே மீள் ஏற்றுமதிக்கு பொருத்தமான பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
உரிமம் வழங்குவது தொடர்பான இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |