ஈரானின் ஆணிவேரை குறிவைத்து தாக்குதல்.. உறுதிபடுத்தியது அமெரிக்கா!
புதிய இணைப்பு
ஈரானின் கார்க் தீவில் (Kharg Island) உள்ள இராணுவ இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியுள்ளதை அந்நாட்டின் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தத் தாக்குதல்கள் ஈரானின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை இலக்கு வைக்கவில்லை என்றும், அமெரிக்காவின் தற்போதைய இராணுவ மூலோபாயத்தில் (Military Strategy) எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: "கார்க் தீவில் உள்ள சில இராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்த நாங்கள் திட்டமிட்டிருந்தோம், அதன் படியே தற்போது தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஈரானியர்கள் எம்மை திருப்திப்படுத்தும் வகையிலான ஒரு முன்மொழிவை வழங்கும் வரை, அவர்களின் எரிசக்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மீது நாங்கள் தாக்குதல் நடத்தப் போவதில்லை."
மேலும், "கார்க் தீவு தாக்குதல் செய்தியானது அமெரிக்க ஜனாதிபதியின் கொள்கையிலோ அல்லது எமது மூலோபாயத்திலோ ஏற்பட்டுள்ள மாற்றமாக கருதப்படக்கூடாது" எனவும் ஜே.டி. வான்ஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
அமெரிக்க அதிகாரியொருவர் வெளியிட்டுள்ள தகவலின்படி, அமெரிக்கா கர்க் தீவிலுள்ள (Kharg Island) இராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இந்தத் தாக்குதல்களில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் இலக்கு வைக்கப்படவில்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் கடந்த மார்ச் 13ஆம் திகதி அமெரிக்கா கர்க் தீவு மீது தாக்குதல் நடத்தியிருந்தது.
அந்தச் சமயத்தில், "கடற்படை கண்ணிவெடி சேமிப்பு நிலையங்கள், ஏவுகணை சேமிப்பு கிடங்குகள் மற்றும் பல இராணுவத் தளங்கள்" உட்பட 90 இலக்குகள் தாக்கப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (US Central Command) தெரிவித்திருந்தது.
முதலாம் இணைப்பு
ஈரானின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் கார்க் தீவில் (Kharg Island) மீண்டும் பலத்த வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
ஈரானின் ஏற்றுமதி செய்யப்படும் மசகு எண்ணெயில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்தத் தீவின் ஊடாகவே கொண்டு செல்லப்படுவதால், இந்தச் சம்பவம் சர்வதேச சந்தையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் அரை-அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான மெஹ்ர் (Mehr) வெளியிட்டுள்ள தகவலின்படி, கார்க் தீவில் "பல வெடிப்புச் சத்தங்கள்" கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகிற்கு பாரிய இழப்பு
இருப்பினும், இந்த வெடிப்புகளுக்கான காரணம் என்ன அல்லது எவ்வளவு சேதம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்த மேலதிக விபரங்களை அந்த நிறுவனம் வெளியிடவில்லை.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த சில வாரங்களாகவே கார்க் தீவை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப்போவதாக அல்லது அதனைக் கைப்பற்றப்போவதாகத் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தார்.
குறிப்பாக, கடந்த மார்ச் 30ஆம் திகதி தனது சமூக வலைதளப் பதிவில், "மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் கிணறுகள் மற்றும் கார்க் தீவு ஆகியவற்றை அமெரிக்காவால் அழிக்க முடியும்" என அவர் பகிரங்கமாக அச்சுறுத்தியிருந்தார்.
ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியின் மையப்புள்ளியாக விளங்கும் கார்க் தீவு தாக்கப்பட்டால், அது உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் பாரிய தட்டுப்பாட்டை உருவாக்கும் என அஞ்சப்படுகிறது.