மாநகர ஆணையாளருக்கு எதிரான முன்மொழிவு நிறைவேற்றம்
மாநகர ஆணையாளருடன் இணைந்து செயற்பட முடியாது என்ற முதல்வரின் முன்மொழிவின் அடிப்படையில் வெளிநடப்புச் செய்த உறுப்பினர்களைத் தவிர்த்து சபையிலிருந்த 19 உறுப்பினர்களில் ஒருவர் நடுநிலைமை வகிக்க ஏனைய மாநகரசபை உறுப்பினர்களின் ஆதரவுடன் முதல்வரினால் கொண்டு வரப்பட்ட மாநகர ஆணையாளருக்கு எதிரான முன்மொழிவு நிறைவேற்றப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபையின் 47ஆவது சபை அமர்வு இன்றைய தினம் மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் மாநகரசபை நகர மண்டபத்தில் கோவிட் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சபைச் சம்பிரதாயங்களுடன் இடம்பெற்ற இச்சபை அமர்வில் முதல்வரின் தலைமையுரையின் பின்னர் நிதிக் குழுவின் சிபாரிசுகள், முன்மொழிவுகள் சபை அனுமதிக்காக முதல்வரால் சபைக்குச் சமர்ப்பிக்கப்படுகின்ற வேளையில் பிரதி முதல்வரால் கணக்காளர் விடுமுறை தொடர்பிலும், பதில் கணக்காளர் இன்மையால் மாநகர ஊழியர்களின் சம்பளம் வழங்கப்படாதமை தொடர்பிலும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் சபையில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
இது தொடர்பில் மாநகர முதல்வர் தெரிவிக்கையில்,
மாநகரசபையின் பிரதம கணக்காளர் தனக்கு மாநகர ஆணையாளரால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகக் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஊடாக ஒரு மாத கால விடுமுறை கோரியிருந்ததாகவும், பிரதம செயலாளர் மாநகர ஆணையாளருடன் தொடர்பு கொண்டு தெரிவிக்கையில் அவரால் இந்நிலையைச் சமாளிக்க முடியும் என்று கூறியதற்கமைவாக கணக்காளருக்கு விடுமுறை வழங்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
ஆனால் ஆணையாளர் அதற்குப் பதிலீடாக எவரையும் நியமிக்கவில்லை எனவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.
அத்துடன் கடந்த சபை அமர்வுகளின் மாநகர ஆணையாளருக்கான காசோலை கையொப்பமிடும் அதிகாரம் பறிக்கப்பட்டு நிர்வாக உத்தியோகத்தருக்கு அவ் அதிகாரம் வழங்கப்படுகின்ற பிரேரணை நிறைவேற்றப்பட்டிருந்தும், அதற்கான கையொப்பத்தினை இதுவரை ஆணையாளர் மாற்றம் செய்து கொடுக்கவில்லை என்றும் அவ்வாறு செய்யாமையினாலேயே தற்போது ஊழியர்களின் சம்பள காசோலைக்குக் கணக்காளர் இல்லாதவிடத்து உறுதிப்படுத்தலுக்குக் கையொப்பமிடுவதற்கு அதிகாரிகள் இல்லாத நிலை காணப்படுவதாகவும் மாநகர முதல்வர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும் உள்ளூராட்சி ஆணையாளரூடாக மேற்படி விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டு பொறியியலாளரை இதனைப் பொறுப்பேற்கும் படி கூறியிருந்தும் அவரும் அதனைப் பொறுப்பேற்பதற்கு மறுப்பதனாலும், ஓய்வு நிலை கணக்காளர் ஒருவரைக் கோரியபோது அவரும் மறுத்துள்ளமையினால் இந்நிலைமைகள் தொடர்பில் ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர் ஆகியோருக்கு அறிவித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இவற்றுக்கும் மேலாக ஆணையாளரின் அச்சுறுத்தல் காரணமாக மேற்படி அதிகாரிகள் தங்கள் பொறுப்புகளைக் கையேற்பதில் பின்வாங்குகின்றார்கள் என்ற கருத்தும் நிலவுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஆணையாளருக்குச் சார்பாகவும் சில உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.
இவ்விடயம் தொடர்பில் பிரதம செயலாளர் ஆராயாமலும், பதிலாள் ஒருவரை நியமிக்காமலும் கணக்காளருக்கு விடுமுறை வழங்கியமையானது தவறான விடயம் என அவ்வுறுப்பினர்களால் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. மேலும் இது தொடர்பில் காரசாரமான விவாதங்கள் உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்றுள்ளன.
விவாதத்தின் மத்தியில் ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வரை சபை அமர்வில் நிதிக்குழு சிபாரிசுகளுக்கு எவ்வித அங்கீகாரமும் அளிக்கப்படுவதற்குத் தாம் உடன்பாடு இல்லை என மாநகரசபை உறுப்பினர்களான து.மதன் மற்றும் வி.பூபாளராஜா ஆகியோர் வெளிநடப்புச் செய்திருந்தனர்.
இதனை அடுத்து சபையின் தீர்மானங்களுக்கு மேலும் மேலும் எதிராகச் செயற்படுதல், சபைத் தீர்மானங்களை நிறைவேற்றாமை, அதிகாரக் குறைப்பு விடயத்தில் காசோலை கையொப்பமிடுதல் செயற்பாடு தொடர்பில் கையொப்பம் மாற்றம் செய்யப்படாமை போன்ற விடயங்கள் ஊடக ஊழியர்களின் சம்பள விடயத்தில் அனைத்திற்கும் காரணகர்த்தாவாகச் செயற்படுகின்ற ஆணையாளருக்கு எதிராக அவருடன் இணைந்து செயற்பட முடியாது என்ற தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு மாநகர முதல்வரால் முன்மொழிவு மேற்கொள்ளப்பட்டது.
இம் முன்மொழிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆணையாளருக்கு ஆதரவாக மாநகரசபை உறுப்பினர்கள் சிலர் வெளிநடப்புச் செய்தனர். அதனைத் தொடர்ந்து மீதமுள்ள உறுப்பினர்களைக் கொண்டு சபை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது நிதிக் குழு தவிர்ந்து முக்கியமாக மக்களின் தேவை கருதி நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் சில ஆராயப்பட்டு சபையில் அங்கீகாரம் அளிக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து மாநகர ஆணையாளருடன் இணைந்து செயற்பட முடியாது என்ற முதல்வரின் முன்மொழிவு தொடர்பில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
வெளிநடப்புச் செய்த உறுப்பினர்களைத் தவிர்த்து சபையிலிருந்த 19 உறுப்பினர்களில் மாநகரசபை உறுப்பினர் கௌரி நடுநிலை வகிக்க ஏனைய உறுப்பினர்களின் ஏகமனதான ஆதரவோடு முதல்வரினால் கொண்டு வரப்பட்ட மாநகர ஆணையாளருக்கு எதிரான முன்மொழிவு நிறைவேற்றப்பட்டது.
இன்றைய சபை அமர்வானது மாநகரசபை ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் அக்கறை கொள்ளாத உயர் அதிகாரிகளின் நடவடிக்கை காரணமாக நிதிக்குழுவின் முன்மொழிவுக்குக் கொண்டுவரப்பட்ட அதிகாரிகளுக்கான வேதனங்கள் தொடர்பிலான எவ்வித தீர்மானங்களும் நிறைவேற்றப்படாமல் நிறைவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வமர்வில் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன் மற்றும் மாநகரசபை
உறுப்பினர்கள், மாநகரசபை பிரதி ஆணையாளர், பொறியியலாளர், சபையின் பதில்
செயலாளராகச் செயற்படும் நிர்வாக உத்தியோகத்தர் எனப் பலரும் கலந்து
கொண்டிருந்தனர்.



