கொரோனா மரணங்கள் தொடர்பான விடயத்தில் அரசியல் நிகழ்ச்சி நிரலை புறந்தள்ளுங்கள் - இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்
கொரோனா வைரஸ் தொற்றால் இறக்கும் நபர்களின் உடல்களை தகனம் செய்வதா அல்லது அடக்கம் செய்வதா என்பது குடும்ப உறவினர்களின் விருப்பத்திற்கு அமைய மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சினையில் அரசியல் நிகழ்ச்சி நிரலை புறந்தள்ளி விட்டு, விஞ்ஞான ரீதியில் தீர்மானத்தை எடுக்க வேண்டும். இந்த பிரச்சினையை பாரதூரமான பிரச்சினையாக அரசாங்கம் மாற்றியது.
உடல்களை அடக்கம் செய்வது மாத்திரமல்ல தகனம் செய்வதற்கு அனுமதி வழங்கி அரசாங்கம் முதலில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டது. அரசாங்கம் அந்த தீர்மானத்தை மீண்டும் ஒரு முறை மாற்றி தகனம் செய்வதை கட்டாயமாக்கி வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டது. இது உலகத்திற்கு வழங்கப்பட்டுள்ள தவறான முன்னுதாரணம்.
உலகில் பல நாடுகள் அடக்கம் செய்ய அனுமதி வழங்கி இருக்கும் போது, இலங்கை அரசாங்கம் மாத்திரம் தகனம் செய்வதை கட்டாயமாக்கி உள்ளமை பாரதூரமான பிரச்சினை. வெளிநாட்டு விசேட நிபுணர்கள், வைரஸ் சம்பந்தமான நிபுணர்களும் உடல்களை அடக்கம் செய்வதால், எந்த ஆபத்தும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறான நிலைமை உயிரிழந்த தமது உறவினர்களுக்கு இறுதி கிரியைகளை செய்வது தொடர்பான தீர்மானத்தை எடுக்க நாட்டுக்கு மக்களுக்கு சந்தர்ப்பம் இல்லாமல் போயுள்ளமையானது பாரதூரமான அனர்த்தம்.
அரசாங்கம் இந்த பிரச்சினையை முற்றாக அரசியல் பிரச்சினையாக மாற்றிக்கொண்டுள்ளது எனவும் இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் குற்றம் சுமத்தியுள்ளார்.